முக்கிய செய்திகள்

பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் மரணம் - வைகோ இரங்கல்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      அரசியல்
vaiko

 

சென்னை, பிப்.21-விடுதலைப் புலிகள்  தலைவர் பிரபாகரன்  தாய் பார்வதி அம்மாள் மரணமடைந்ததற்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ் ஈழத்தின் அன்னை பார்வதி அம்மையார்  மறைந்து விட்டார். தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனை தன் மணிவயிற்றில் சுமந்த அந்த வீரத்தாயின் மரண செய்தி கேட்டு இதயத்தில் ஈட்டியாக பாய்ந்தது. தமிழ் ஈழத்தின் தவப்புதல்வனை பெற்ற அந்த தாய்க்கு அவரது வாழ்நாளில் ஏற்பட்ட துயரம் விவரிக்கவே இயலாத கொடுந்துன்பம் ஆகும். 

இந்தியா உள்ளிட்ட வல்லரசுகளின் ஆயுத உதவியை பெற்று சிங்கள அரசு தமிழ் இனப் படுகொலையை நடத்திய நாட்களில் ஈழத் தமிழ் தேசிய தலைவரின் தந்தையும், தாயும் ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டனர். அங்கே எத்தனை துன்பங்களை தாங்கினார்களோ? ஐயோ நினைக்கும்போதே நெஞ்சு நடுங்குகிறது. 

2010 ஜனவரி 7 ஆம் நாள் உலகத் தமிழர்களை துயரத்தில் தவிக்கவிட்டு வேலுப்பிள்ளை சிங்கள ராணுவ முகாமின் பிடியிலேயே மறைந்தார். நெஞ்சம் சல்லடை கண்களாக துன்பத்தால் துளைக்கப்பட்ட நிலையில் அன்னை பார்வதி அம்மையார் சிகிச்சைக்காக முதலில் மலேசிய நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் உயர்தர சிகிச்சையை தமிழகத்தில் பெறுவதற்காக உடல் மிக நலிவுற்ற நிலையில், மலேசியாவில் இருந்து விமானத்தில் பயணித்து தமிழகம் நோக்கி வந்த வேளையில் 2010 ஏப்ரல் 16 ஆம் நாள் இரவில் தமிழகத்தின் தலைநகர் சென்னை விமான நிலையத்தில் விமானத்தை விட்டு கீழே இறங்குவதற்குக்கூட இத்தமிழ் மண்ணில் அவர் காலடி படுவதற்குக்கூட அனுமதிக்காமல், ஈவு இறக்கம் இன்றி மனிதாபிமானத்தை சாகடித்து திருப்பி அனுப்பிய மன்னிக்க முடியாத அக்கிரமத்துக்கு தமிழக முதல்வர் கருணாநிதியும், இந்த அரசுமே பொறுப்பாளிகள் ஆவார்கள். 

அதைவிட கொடுமை அவர் அறிந்து கொள்ளாமலேயே அவரது கைவிரல் ரேகையை பதித்து, ஒரு கடிதத்தை இந்திய தூதரகத்தின் மூலமாக மலேசியாவில் இருந்தே இந்திய அரசுக்கு அனுப்பி இந்திய அரசிடம் அந்த தாய் அனுமதி வேண்டுவதாக ஈனத்தனமான வேலையில் இந்திய அரசு ஈடுபட்டது. தமிழ் நாட்டு மக்களையும், உலக தமிழ் மக்களையும் ஏமாற்ற சில நிபந்தனைகளோடு இந்தியா வர அனுமதிப்பதாக சொல்லி அந்த வீரத்தாயை அணுகியபோது அந்த மாதரசி மறுத்து விட்டார். தான் பிறந்த மண்ணுக்கே திரும்பிச் சென்றார். 

ஓயாது அந்த வீரத்தாயின் நெஞ்சில் மோதிய துன்ப அலைகள் இப்போது ஓய்ந்து விட்டன. பெண் குலத்தின் பெருமை தரும் உயிர் சுடர் அணைந்து விட்டது. ஆனால் எங்கள் அன்னை பார்வதி அம்மையாரின் பெயர் இந்த உலகம் உள்ள வரையிலும் நிலைத்து நிற்கும். தமிழ் வரலாற்றில் என்றும் அழியாத வீரத்தின் அடையாளமாய் புகழோடு வாழும். 

அன்னை பார்வதி அம்மையாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கு அன்னையின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து இரங்கல் ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துமாறும் வேண்டுகிறேன். 

இலங்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று மாலை 4 மணி அளவில் தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தியாகராயர் (செ.த.நாயகம்) மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் பழ.நெடுமாறன் தலைமை ஏற்க, நானும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனும், தமிழ் உணர்வாளர்களும் பங்கு ஏற்கிறோம். புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கு ஏற்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: