முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித தலங்களுக்குச் செல்ல இந்துக்களுக்கு அரசு உதவி செய்யும் காரைக்குடியில் ஜெயலலிதா பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

காரைக்குடி, ஏப்.- 6 - அ.தி.மு.க ஆட்சி  அமைந்தவுடன் சீனாவில் உள்ள மான்சர்வர், நேபாளத்தில் உள்ள சாலிக்கிராமம் ஆகிய புனித தலங்களுக்குச் செல்ல இந்துக்களுக்கு அரசு உதவி செய்யும் என்று காரைக்குடியில் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா பேசினார். நேற்று காரைக்குடியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களான காரைக்குடி வேட்பாளர் சோழன் சித.பழனிச்சாமி, திருப்பத்தூர் வேட்பாளர் ராஜகண்ணப்பன், சிவகங்கை கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் உங்கள் முன் வந்திருக்கிறேன். ஒரு குடும்பத்திடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க பொன்னான வாய்ப்புதான் இந்த தேர்தல். கருணாநிதியும், தி.மு.கவிலுள்ள ஒருசில தலைவர்களும், சில குடும்பங்களும் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உங்கள் முன் இருப்பதுதான் இந்த தேர்தல்.

விலைவாசி உயர்வால் நீங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள். ரவுடியிசம், அரிசி கடத்தல், ஊழல், சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத அக்கிரமம், கள்ளச்சாராயம் போன்ற சமூகவிரோத செயல்கள் அனைத்திற்கும் இந்த தேர்தல் மூலமாக, தமிழகத்தை மீட்க முடியாவிட்டால், எப்போது கருணாநிதியிடம் இருந்து மீட்கப் போகிறோம் என்று நல்லோர் மனச்சாட்சி கேட்கிறது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் மூலமாக 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் புரிந்து வரலாற்றுச் சாதனை புரிந்து, இதனால் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கருணாநிதி ஆட்சியில் பின்தங்கி விட்டது. 1 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்தை கடனாளியாக ஆக்கி இருப்பதுதான் கருணாநிதியின் 5 ஆண்டுகால சாதனை. தன் குடும்பம் பலவழிகளில் கொள்ளையடித்து பேராசையினால் குபேரனாகியுள்ளார். இலவச டி.வியை ரூ.2000க்கு கொடுத்துவிட்டு வருடத்திற்கு ரூ,1000 கேபிள் டிவி மூலம் தன் குடும்பத்திற்கு தமிழக மக்களிடமிருந்து சூழ்ச்சி தந்திரத்தால் வாங்கிக் கொள்கிறார்.

உலகப் பணக்காரர்கள் வரிசையில் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் 310-வது இடத்தில் இருப்பதை வெளிநாட்டில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு சொத்து மதிப்பை வெளியிட்டிருக்கிறது. உலகப் பணக்காரர்களில் ஒருவராக கருணாநிதியின் பேரன் சேர்ந்து விட்டார் என்றால் கருணாநிதியின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என்று ஒவ்வொருவராக சேர்த்தால் உலகிலுள்ள மிகப் பெரிய பணக்கார குடும்ப வரிசையில் கருணாநிதியின் குடும்பமும் உள்ளது. தமிழகம் ரூ.1 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. பீகார். குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விட பின்தங்கி இருக்கிறது. அதற்கு காரணம் கருணாநிதி தன் குடும்பம் மட்டும் செழிப்பாக இருக்க திட்டம் தீட்டி செயல்படுகிறார்.

ஒரு தலைமுறையில் கருணாநிதியின் குடும்பம் குபேரனாக மாறி இருக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நமக்குக் கிடைத்த வாய்ப்பு தேர்தல். கருணாநிதியும், தி.மு.க கட்சியினரும் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அவர்களை டெபாசிட் இழக்க வைத்து புதிய சாதனை செய்து முடிக்க வேண்டும். கருணாநிதியிடம் இருந்து தமிழகத்தை மீட்கவும், தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் அமையவும் அ.தி.மு.க கூட்டணியை ஆதரியுங்கள்.

அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் சட்டம் ஒழுங்க நன்கு பராமரிக்கப்படும். உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும் எஸ்.ஐ வெற்றிவேல் மீது வெடிகுண்டு வீசிய செயலை நேரில் பார்த்தும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மைதீன்கான் எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்துச் சென்றதும் தெரியும். இதெல்லாம் அவர்களது மனிதாபிமானமற்ற செயலை எடுத்துக் காட்டுகிறது. 

தி.மு.க.வை வீழ்த்தவேண்டும். தமிழ்நாட்டை சூழ்ச்சிகளிடமிருந்து மீட்டெடுக்கவும், சரியான முடிவு எடுக்க உலகமே உங்களை பாராட்டும் நாள்தான் தேர்தல் நாள். 

அனைவருக்கும்20 கிலோ தரமான இலவச அரிசி கிடைத்திட, தாய்மார்களுக்கு இலவச பேன், மிக்சி,கிரைண்டர் இலவசமாக வழங்கிட, பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கிட, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியரும் இலவச லேப்டாப் பெற்றிட, 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக 1000 முதல் 5000 ரூபாய் வரை வழங்கிட, வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் அளித்திட, வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 1,80,000 ரூபாய் செலவில் 300 சதுர அடியில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தந்திட, முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோருக்கான உதவித்தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்திட, கேபிள் தொழிலை அரசுடமையாக்கி அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி இணைப்பு குறைந்த கட்டணத்தில் கிடைத்திட, 60000 பால் கறவை மாடுகளை இலவசமாக 6000 கிராமங்களுக்கு அளித்திட, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4ஆடுகள் இலவசமாக வழங்கிட, கரும்புக்கான கொள்முதல்விலையை 2500 ரூபாயாக உயர்த்திட, விவசாயிகளுக்கு இலவசமாக சொட்டு நீர் பாசன வசதி செய்து தந்திட, விவசாயிகளுக்கு தரமான விதைகள் மற்றும் இடுபொருட்கள் தள்ளுபடி விலையில்  கிடைத்திட, சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் அளவிற்கு வழங்கும் கடனில் 25 விழுக்காடு மானியம் அளித்திட, 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகையுடன் மணப்பெண்ணிற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கிட, 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கிட, தடையில்லா மின்சாரம் பெற்றிட, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரியஒளி மூலம் தடையில்லா  மின்சார வசதி இலவசமாக வழங்கிட, தமிழகம் எங்கும் உள்ள குடிநீர் பிரச்சனைகள் தீர, அண்டை மாநிலங்களுடனான  நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, கட்டுக்கடங்காமல் ஏறியுள்ள விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மேம்படுத்த, சாலை இல்லாத ஊர்கள் சாலை வசதி பெற்றிட, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்திட, கடந்த 5 ஆண்டுகால மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மீனவர்கள் ஆகிய உழைக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பினையும் உறுதி செய்திட, தொழில் வளம் பெருக, தொழில் அமைதியை உறுதி செய்திட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட, சத்துணவு ஊழியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்ற, பாதாள சாக்கடைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட, கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கக்கூடிய உழவர் பாதுகாப்புத்திட்டத்தினை புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்படுத்திட, நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்களைத்தொடர்ந்து செயல்படுத்திட,  ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ள தமிழ்நாட்டில் மக்களை மீட்டிட, கருணாநிதி குடும்பத்தினர் உட்பட தி.மு.கவினரால் ஏழை எளிய மக்களிடமிருந்து மிரட்டிவாங்கப்பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்திட, ஒரு ரவுடிக் கும்பல் தமிழக மக்களை அடக்கி ஆள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கவேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆரின் நல்லாசியுடனும், உங்கள் நல்லாதரவுடனும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் காரைக்குடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். தேவகோட்டையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படும். சாக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்படும். நவீனப்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளையும், சாலைகளையும் மேம்படுத்தப்படும். ஹஜ் செல்வதற்கு இஸ்லாமியர்களுக்கு உதவுவது போல் கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் செல்வதற்கு உதவி செய்யப்படும் என்று அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளேன். அதேபோல் சீனாவில் உள்ள மானசர்வர், நேபாளத்திலுள்ள சாலிக்கிராமம் போன்ற புனித தலங்களுக்கு இந்துக்கள் செல்ல உதவி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஜெயலலிதா காரைக்குடிக்கு 3.35க்கு வந்தார். அவரை காரைக்குடி வேட்பாளரும், சிவகங்கை மாவட்டச் செயலாளருமான சோழன் சித.பழனிச்சாமி வரவேற்றார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் திரளாக வந்திருந்து வரவேற்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்