முக்கிய செய்திகள்

ஊழலை ஒழிக்க சட்டம் இயற்றக்கோரி சமூக சேவகர் ஹசரே சாகும் வரை உண்ணாவிரத்தை தொடங்கினார்

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      ஊழல்
Anna-Hazare

 

புதுடெல்லி,ஏப்.- 6 - நாட்டில் ஊழலை அடியோடு ஒழிக்கும் வகையில் ஜன் லோக்பால் மசோதாவை சட்டமாக்க வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அன்னா ஹசரே நேற்று தலைநகர் டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. அரசு வேலை பார்ப்பதும் அரசியலுக்கு வருவதும் சம்பாத்தியத்திற்கே என்ற மனப்பாண்மை மக்களிடத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் உடனடியாக பணக்காரர்களாக வருவதோடு ஆடம்பரமாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணமும் அதிகரித்து வருகிறது. அதனால் ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதை தடுக்கும் வகையில் ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அன்னா ஹசரே நேற்று டெல்லியில் உள்ள சந்தர் மந்தரில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். முன்னதாக அவர் டெல்லியில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு ஊர்வலமாக ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருடன் சமூக சேவகர்கள் சுவாமி அக்னிவேஷ்,கிரன் பேடி, சந்தீப் பாண்டே ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருப்பதாக தெரிகிறது. ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றும் வரை நாங்கள் உண்ணாவிரதம் இருப்போம். ஊழலை அடியோடு ஒழிக்க வகை செய்ய இந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் உயிரை இழக்கவும் தயாராக இருக்கிறோம் என்று 72 வயதாகும் ஊழல் எதிர்ப்பாளர் ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். 

ஊழலை அடியோடு ஒழிக்க மக்களும் சேர்ந்து போராட வேண்டும். ஊழலை ஒழிக்க இன்று ஒரு நாள் நாட்டு மக்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருப்போம். இந்தியாவில் அடியோடு ஊழல் ஒழிய இறைவனை வேண்டுவோம். கூட்டுப்பிரார்த்தனை மிகவும் சக்திவாய்ந்தது. ஊழலில் இருந்து நாடு விடுபட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம் என்றும் ஹசரே கூறினார். ஹசரே உண்ணாவிரதத்திற்கு பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமான நிலைத்தை சரத்பவார் ஆக்கிரமித்து உள்ளார் என்பதும் ஹசரேயின் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: