ஆதரவு எவ்வளவு நாள் என்பதை சொல்ல முடியாது...!

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.21 - மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி கொடுத்து வரும் ஆதரவு எவ்வளவு நாள் வரை நீடிக்கும் என்பதை சொல்ல முடியாது என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.  டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்து இருப்பதற்கு ஆளும் கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்றுக்குள் மத்திய அரசின் இந்த முடிவை வாபஸ் பெறாவிட்டால் ஆதரவை வாபஸ் பெறப்போவதாகவும் அந்த கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதனால் மத்திய அரசு ஆட்டம் கண்டுள்ளது. அதேமாதிரி சமாஜ்வாடி கட்சியும் ஆதரவை வாபஸ் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டு வரும் ஆதரவு எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதை எங்களால் சொல்ல முடியாது. மத்திய அரசுக்கு தற்போது ஆதரவு கொடுத்து வருகிறோம். இந்த ஆதரவு எதுவரை நீடிக்கும் என்பதை சொல்ல முடியாது என்றார். எதிர்காலத்தில் நடப்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் என்றார். 

லோக்சபைக்கு இடைத்தேர்தல் வரலாம் என்று கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ராம்கோபால் யாதவ், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு இருந்தாலும் கூட லோக்சபைக்கு இடைத்தேர்தல் வரலாம் என்றார். திக்விஜய்சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்களே பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வரலாம் என்று கூறுகிறார்கள் என்றும் யாதவ் தெரிவித்தார். ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்து டீசல் விலையை குறைப்பதோடு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை வாபஸ் பெறுமா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த யாதவ், மத்திய அரசானது தங்களுடைய கொள்கையில் தொடர்ந்து செல்வோம் என்று கூறிவிட்டு பின்னர் பல தடவை பின்வாங்கியுள்ளது என்றார். மத்திய அரசுக்கு எங்கள் கட்சி ஆதரவு கொடுத்து வருவதால் அரசு செய்யும் தவறுகளை தட்டிக்கேட்ட எங்கள் கட்சிக்கு உரிமை உண்டு என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: