அமைச்சரவையில் மாற்றம்: சிரஞ்சீவி அமைச்சராகிறார்?

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 22 - மத்திய அமைச்சரவையில் விரைவில் மேற்கொள்ள இருக்கும் மாற்றத்தின் போது ராகுல்காந்தி அமைச்சர் பொறுப்பேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் தமது 6 அமைச்சர்களை விலக்கிக் கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவையும் திரும்பப் பெறுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறது மத்திய அரசு. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ராகுல் காந்தியும் அமைச்சராவார் என்று கூறப்பட்டாலும் தற்போது அவர் அமைச்சரவையில் இணைய மாட்டார் என்றே கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் மகாராஷ்டிரா முதல்வராக உள்ள பிரித்விராஜ் சவாண் மாற்றப்பட்டு மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா முதல்வராவதற்கு முன்பு அவர் பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அண்மையில் காலமான மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் அமித் தேஸ்முக்குக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமது பிரஜா ராஜ்யம் கட்சியையே கலைத்து விட்டு காங்கிரசில் ஐக்கியமான நடிகர் சிரஞ்சீவிக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேற்குவங்கத்தைச் சேர்ந்த தீபா தாஸ்முன்ஷி அல்லது அதிர் செளத்ரிக்கும் கர்நாடகத்தின் ரஹ்மானுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதே போல் வீரப்ப மொய்லி மற்றும் வயலார் ரவி ஆகியோரது அமைச்சகப் பொறுப்புகளிலும் மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: