இன்றுஅமெரிக்க அதிபர்தேர்தல்: வெல்லப்போவது ஒபாமாவா, ரோம்னியா?

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நவ. - 6 - அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறப் போவது தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவா அல்லது குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் ரோம்னியா என்பது தேர்தலுக்கு பிறகு தெரிந்து விடும். கிட்டத்தட்ட 18 மாதங்களாக அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் இந்த தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட வாக்கு சேகரிக்கும் பணியில் அதிபர் பாரக் ஒபாமாவும், அவரை எதிர்த்து போட்டியிடும் ரோம்னியும் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் அதிபர் ஒபாமாவுக்கு பெண்களின் ஆதரவு அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் ரோம்னிக்கு ஆண் வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு வேட்பாளர்களுமே கிட்டத்தட்ட 3 முறை நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை எதிர்த்து போட்டியிடும் ரோம்னியை சில கட்டங்களில் ஒபாமா கிண்டலடித்தும் பேசினார். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஒபாமாவுக்கு 48 சதவீத ஆதரவும், ரோம்னிக்கு 45 சதவீத ஆதரவும் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவே வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடக்கிறது. எனவே வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைக்கப் போவது ஒபாமாவா, அல்லது ரோம்னியா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். ஒபாமாவுக்கு வாக்கு சேகரித்த பாடகி
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பராக் ஒபாமாவின் பார்வர்ட் என்ற பிரசார வாசகம் பொறிக்கப்பட்ட இறுக்கமான, கவர்ச்சி உடை அணிந்து ஆடிப் பாடி வாக்கு சேகரித்தார் பிரபல பாடகி கேத்தி பெர்ரி.
ஒபாமா, ஒபாமா, ஒபாமா... இதுதான் அமெரிக்கா முழுவதும் பெரும்பான்மையாக ஒலிக்கும் குரலாக மாறியுள்ளது. இன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்கா முழுவதும் படு உஷ்ணமாகியுள்ளது. சான்டி புயலின் தாக்குதல் சோகத்தையும் தாண்டி ஒபாமா புகழ் பாடும் கோஷங்கள் அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் விஸ்கான்சின் மாகாணம், மில்வாக்கி நகரில் உள்ள டெல்டா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரி கலந்து கொண்டு ஆடிப் பாடி ஒபாமாவுக்காக வாக்கு சேகரித்தார். ஒபாமா இந்த தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய பார்வர்ட் அதாவது முன்னேறிச் செல்வோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட, இறுக்கமான சிவப்பு, வெள்ளை, நீல நிறத்திலான உடையில் அவர் மேடையேறிப் பாடிய போது அரங்கமே குதூகலித்து கோஷமிட்டு கூடப் பாடியது.
அமெரிக்க தேச பக்திப் பாடலுடன் பாட ஆரம்பித்த கேத்தி பெர்ரி, தொடர்ந்து ஒபாமாவை ஆதரித்துப் பாடினார். படு கவர்ச்சிகரமான மேக்கப்புடனும் பாடிய கேத்தி அத்தனை பேரின் இதயங்களையும் கொள்ளை கொண்டு விட்டார். பாடலின் இடையே, சாண்டி புயலில் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள் என்ற கோரிக்கையையும் அவர் வைக்கத் தவறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: