முக்கிய செய்திகள்

சென்னையில் 16 தொகுதிகளில் 10 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
12UMA01

 

சென்னை, ஏப்.13 -​ சென்னையில் இன்று 16 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஓட்டுச் சாவடிகள் உள்ளதாக கமிஷனர் ராஜேந்திரன் பேட்டி அளித்தார்.   

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:​ தேர்தலையொட்டி சென்னை நகரில் 16 தொகுதிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்து மாவட்டங்களின் 5 தொகுதிக்கான சில பகுதிகளும் சென்னைக்குள் வருவதால் அங்கும் பாதுகாப்பு கொடுத்துள்ளோம். 952 கட்டிடங்களில் 3723 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி, முகமது சதக்கல்லூரியில் நடைபெறும். பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதவிர 16 கம்பெனி துணை ராணுவமும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுகிறார்கள். ஓட்டு போடுபவர்கள் தவிர வேறுயாரும் அத்துமீறி நுழையா வண்ணம் துணை ராணுவத்தினர் கண்காணிப்பார்கள். இதுதவிர 384 ரோந்து படையும், 17 பறக்கும் படை போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். வாக்குப்பதிவு எந்திரம் உள்ள இடங்கள், ஓட்டு எண்ணும் இடங்களில் இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இதுதவிர 2079 தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வசம் உள்ள 1936 துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த ரூ. 73 லட்சம் பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2700 ரவுடிகள் பட்டியல் எடுக்கப்பட்டு அதில் 2600 பேரிடம் ஒழுங்காக இருப்போம் என எழுதி வாங்கப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த 60 வாக்குச்சாவடிகளில் 3 அடுக்க பாதுகாப்பு போடப்படுகிறது. இவ்வாறு கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

தேர்தல் முடிந்தவுடன் சென்னையில் வாக்கு எண்ணும் இடங்களான ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்படும். இந்த இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எந்திர துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் 24 மணி நேரமும் சுற்றுக்காவல் முறையில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: