கவுதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: 39பேர் பலி: 100 பேர்மாயம்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

மெக்சிகோ, நவ. - 9 - கவுதமாலாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 39 பேர் பலியாகியுள்ளனர். பசிபிக் கடலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கவுதமாலாவின் மேற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்தது. கவுதமாலா அருகில் உள்ள மெக்சிகோ மற்றும் எல் சால்வாடரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கவுதமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் 135 வீடுகள் சேதமடைந்தன. பல்வேறு கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 39 பேர் பலியாகினர். 155 பேர் காயம் அடைந்துள்ளனர். இது தவிர 100 பேரைக் காணவில்லை என்று கவுதமாலா அதிபர் ஓட்டோ தெரிவித்துள்ளார். நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து பொதுக் கட்டிடங்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். 73,000 வீடுகள் மின்சாரமின்றி இன்றி தவித்தன. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்தது. கவுதமாலாவில் கடந்த 1976 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ம் தேதி ஏற்பட்ட 7.5 அளவிலான நிலநடுக்கத்திற்கு பிறகு தற்போது தான் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 1976ல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 23,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: