முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வால்மார்ட்டை கண்டித்து இடதுசாரிகள் போராட்டம்

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிக்க மாட்டோம் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை மீறி ஆரம்பிக்கப்பட்டுள்ள  சென்னை அண்ணாநகரில் உள்ள வால்மார்ட் அலுவலகத்தை இடதுசாரி அமைப்புகளின் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு:-

இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை, பன்னாட்டு  நிறுவனங்களை மத்திய அரச அனுமதித்துள்ளது. இது இந்திய வர்த்தகச் சந்தையை கைப்பற்றவும், வேலைவாய்ப்பைப் பறிக்கவும், வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கவுமே வழிவகுக்கும். எனவே, இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம், அண்ணாநகரில் தனது வணிக அலுவலகத்தை திறந்துள்ளது. திருவேற்காடு பள்ளிக் குப்பத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் சேமிப்பு குளிர்பதன கிடங்கையும் அந்த நிறுவனம் அமைத்து வருகிறது. சில்லரை வியாபாரிகளை அணுகி அனைத்து பொருட்களையும் குறைந்த விலை, கடன் வசதி, விரும்பிய இடத்தில்  விநியோகம் உள்ளிட்ட பலவற்றைச் சொல்லி உறுப்பினர்களாக சேர்த்து வருகிறது. ஜனவரி முதல் வியாபாரத்தை தொடங்கவும் உள்ளது. சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசின் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவையும் மீறி இத்தகைய அத்துமீறல் நடந்து வருகிறது.

இதனை கண்டித்தும், வால்மார்ட் நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் சிபிஎம், சிபிஐ கட்சிகள் சார்பில் நேற்று (டிச.26) இந்த போராட்டம் நடைபெற்றது. அண்ணாநகர் மேற்கு போக்குவரத்து பணிமனை அருகே இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். பன்னாட்டு நிறுவங்கள் இந்தியாவிற்குள் வந்ததால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை விவரிக்கும் வகையில் கட்சி ஊழியர்கள் வேடமிட்டு வந்தனர்.

பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் கருத்துப்படங்களை கொண்டு வந்திருந்தனர். வால்மார்ட் அலுவலகத்தை நோக்கி பெண்கள், மாணவர்கள், வாலிபர்கள், தொழிலாளர்கள், கட்சி ஊழியர்கள், வணிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

மாநிலச் செயலாளர் தா.பாண்டின் தலைமையில் ஊர்வலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான முழக்கங்களை முழங்கியபடி, போலீசாரின் 6 பாதுகாப்பு வளையங்களையும் உடைத்துக் கொண்டு சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனையும் மீறி, வால்மார்ட் அலுவலகம் அமைந்துள்ள ஏ.வி.கே.டவரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது இளைஞர்கள் அமெரிக்க கொடியை எரித்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

சில்லரை வணிகம் செய்யவில்லை; சில்லரை வணிகர்களுக்கு மொத்தமாக பொருட்களை வழங்குகிறோம் என்று வால்மார்ட் நிறுவனம் புது விளக்கம் தருகிறது. சில்லரை வர்த்தகத்தில் தந்திரமாக நுழைகிறது. திருவேற்காட்டிலிருந்தும், அண்ணாநகரிலிருந்தும் வால்மார்ட் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதனை வலியுறுத்தி இந்த மகத்தான முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. வால்மார்ட் நிறுவனத்தை முழுமையாக அகற்றும் வரை போராட்டம் ஓயாது. இந்தியாவில் எங்கு வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் கடைகள் திறந்தாலும் அதனை எதிர்த்து இடதுசாரிகள் போராடுவார்கள் என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், என்.சீனிவாசன், என்.குணசேகரன், கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ, எஸ்.கண்ணன், ப.சுந்தரராசன் மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), கே.செல்வராஜ் (திருவள்ளுர்), மோகனன் (காஞ்சிபுரம்) சிபிஐ தேசியக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.தியாகராஜன், மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள்  மு.சம்பத் (வடசென்னை), எஸ்.ஏழுமலை (தென்சென்னை), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.ராணி உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்