முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன.24-ல் அ.தி.மு.க. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்: முதல்வர்

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன.20 - காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் இன்னமும் வெளியிடாது காலம் தாழ்த்துவது; மின்சாரம் தர மறுப்பது; கூடுதல் நிதி தர மறுப்பது; மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைக் குறைப்பது என தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதோடு மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளையும், ரயில்வே கட்டணத்தையும் உயர்த்தி, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும், தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்து, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 24.1.2013 அன்று நடைபெறுகிறது. 

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், மாநில அரசின் உரிமைகளை பறிப்பதையும், காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பதையும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதையும், தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. 

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாத சூழ்நிலையில், அதனை தி.மு.க.​வும் வேடிக்கை பார்த்து வந்த நிலையில், நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் பாரதப் பிரதமரை நேரில் சந்தித்தும், கடிதங்கள் வாயிலாகவும் இதனை வலியுறுத்தினேன்.  இதனை மத்திய அரசு உதாசீனம் செய்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை தொடுத்து, அதன் விளைவாக 31.1.2013-​க்குள் மத்திய அரசு தனது முடிவினை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு  இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது.  கருணாநிதியும் தன்னலத்தைக் கருத்தில் கொண்டு காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடக் கூடாது என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாக தமிழக மக்கள் கருதுகின்றனர்.  

இது மட்டும் அல்லாமல், டெல்லி மாநில அரசால் தேவையில்லை என்று ஒப்படைக்கப்பட்ட மின்சாரத்தை தமிழகத்திற்கு தருவதற்கும், கூடங்குளம் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கும், தமிழகத்திற்கு தேவையான மண்ணெண்ணெயினை அளிப்பதற்கும், கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கும், டிஜிட்டல் உரிமத்தை தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு தருவதற்கும்  மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மறுத்து வருகிறது.  

இன்னும் சொல்லப் போனால், தமிழக அரசின் தேவைகளைப் பற்றியும், உரிமைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பதற்கு கூட போதிய கால அவகாசத்தை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. 

இதே போன்று, விஷம் போல் உயர்ந்து கொண்டே இருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, ரயில்வே கட்டண உயர்வு என அனைத்தையும் உயர்த்தி விலைவாசி மேலும் உயர வழி வகுக்கும் நடவடிக்கைகளை, மக்களை வாட்டி வதைக்கும் நடவடிக்கைகளை, மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கும் நடவடிக்கைகளை திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்து வருகிறது.   

தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற, தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற, கூட்டாட்சித் தத்துவத்திற்கு கேடு விளைவிக்கின்ற தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு, தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் தி.மு.க. தலைவர் 

கருணாநிதிக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற; காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாத; தமிழகத்திற்கு தேவையானவற்றை தர மறுக்கின்ற; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளையும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கின்ற; ரயில்வே கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், 24.1.2013 வியாழக் கிழமை அன்று காலை 10.30 மணி அளவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். 

மாவட்ட அளவில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை ஏற்போர் மற்றும் முன்னிலை வகிப்போர்களது பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. 

கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் அனைத்து இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு, திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான சர்வாதிகார மத்திய கூட்டணி அரசுக்கு தங்களுடைய கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். 

மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony