முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்த் தேக்க தொட்டிகள்: அமைச்சர் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

 

விருதுநகர், ஜன. 20  - திருத்தங்கல்,சிவகாசி மற்றும் பூவநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.15 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளையும்;,  கூடுதல் நீர் ஆதாரத்துடன் புணரமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியையும் தமிழக செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் 1662 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 30,000 லிட்டர் கொள்ள கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியையும், சிவகாசி நகராட்சி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் 720 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  பயன்பெறும் வகையில் 10,000 லிட்டர் கொள்ளவு  கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியையும், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.4 லட்சம் மதிப்பில் 584 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  பயன்பெறும் வகையில் கூடுதல் நீர் ஆதாரத்துடன் புணரமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியையும் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து பேசியதாவது :-

தமிழகம் கல்வியில் முதலிடம் பெற மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வித்துறைக்கு ரூ. 14500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்துள்ளார் தமிழக முதல்வர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட ஊக்குவிக்கும் வகையில் கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பேரூந்து பயண அட்டை, விலையில்லா மடிகணினிகள், 2 ஜோடி சீருடைகளுக்கு பதிலாக நான்கு ஜோடி சீரூடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, வண்ண பென்சில்கள், புவியியல் வரைப்பட புத்தகம், காலணிகள், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு வசதி, போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். 

மாணவர்கள் படிக்கின்ற பணியினை மட்டும் செய்தால் போதும். மாணவ மாணவியர்கள் கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார். உலகில் உள்ள செல்வங்களில் எல்லாம் முதன்மையானது கல்விச் செல்வம்தான். மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து விடும் கல்விச் செல்வம் ஆனது நமது உயிர் உள்ள வரை உடனிருக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மாணவ, மாணவிகளின் தாயாக, தந்தையாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் குருவாக இருந்து கல்விக்காக அனைத்து உதவிகளையும் செய்து மாணவ, மாணவிகளை காக்கின்ற கடவுளாக திகழ்கிறார். எதிர்கால ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் இன்றைய மாணவ சமுதாயம், கல்வித்துறையில் முதல்வர் அளிக்கும் நலத் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி கல்வியில் முழுமை பெற வேண்டும். 

திருத்தங்கல் சி.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவன் நான், நான் படிக்கின்ற காலத்தில் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக சிறிய குடிநீர் தொட்டி மட்டுமே இருந்தது. தமிழக முதல்வர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சுகாதாரமான தடையில்லா குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2012-13 ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. 

சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சிவகாசி தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்யப்பட்டு வருகிறது. திருத்தங்கல் சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பெண்கள் சுகாதார வளாகம் ஆண்கள் சுகாதார வளாகம் ஆகியவை தலா ரூ. 5லட்சம் மதிப்பீட்டில் விரைவில் கட்டப்பட உள்ளது. எனது தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய ஒவ்வொரு நிமிடமும் நான் தயாராக இருக்கிறேன் என்றார். 

பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி திறப்பு விழாவின் போது,

சிவகாசியில் இருந்து பூவநாதபுரம் வழியாக வடபட்டி கிராமத்திற்கு காலை 9.30 மணிக்கும் மதியம் 2.30 மணிக்கும் அரசு பேருந்து வந்து செல்கிறது. ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் பேருந்தினை காலை 8.30-க்கும் மாலை 4.30 க்கும் மாற்றி அமைக்க மாணவர்களும், ஆசிரியர்களும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையின் மீது நடவடிக்கையாக அமைச்சர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிவகாசி கிளை மேலாளரிட

ம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், அரசு பேருந்தின் நேரத்தை மாற்றி அமைக்க கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில் திருத்தங்கல் நகர் மன்ற தலைவர் தனலட்சுமிகணேசமூர்த்தி, சிவகாசி நகர்மன்ற தலைவர் மரு.கதிரவன், நகர்மன்ற துணைத்தலைவர் அசன்பகுருதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி, பூவநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருநாராயணசாமி, திருத்தங்கல் நகர் மன்ற உறுப்பினர்கள் கோவில்பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி, பரமன், சீனிவாசன், மாரீஸ்வரிகாளிராஜ், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் ரெங்கன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மு.புகழேந்தி, உதவி நிர்வாக பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் ராமசுப்பிரமணி, திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் (பொ) முருகன், தலைமை ஆசிரியர்கள் ராஜாராம், பாலசுப்பிரமணியம், கதிரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.மாரியப்பன், வட்டாட்சியர் சாந்தா, ரமணபிரியன்  உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony