முக்கிய செய்திகள்

நாகையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் - நடிகர் விஜய்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      சினிமா
vijay

 

சென்னை, பிப்.22 - தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லபடுவதை கண்டித்து நாகையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவ சமுதாயத்தினருக்கு இன்று இழைக்கப்படும கொடுமைகளை கண்டு வேதனையுடன் இந்த  அறிக்கையை வெளியிடுகிறேன். தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது.

அவர்கள் பிழைப்பிற்காக உயிரை பணயம் வைத்து கடலுக்குள் மீன் பிடிக்கப்போனால் சிங்கள ராணுவத்தினர் அவர்களை சுட்டுக்கொல்வதுடன், சிறைப்பிடித்துச் சென்று சித்ரவதை  செய்வதுடன், அவர்களின் தொழில் உபகரணங்களை பறிப்பதும், அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன. இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகும் அவர்களுக்காக பரிந்து பேசி அரசாங்கம் ஓர் இறுதி முடிவு எடுக்க வேண்டும். கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களை கரை சேர்க்க, அவர்கள் வேதனையை நம் ஓங்கி ஒலிக்க இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்திவிருக்கிறோம்.  என் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஒன்று திரண்டு வந்து தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்து உணர்த்த வேண்டும். உலகின் எந்த கோடியில் தமிழனக்கு தலைக்குனிவு ஏற்பட்டாலும் எட்டு கோடி தமிழர்களும் வெகுண்டு எழுவார்கள் என்ற எண்ணித்தை ஏற்படுத்த வேண்டும்.

இந்த கண்டன பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள வி.டி.பி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகின் கவனத்தை மீனவ சமுதாயம் மீது திசை திருப்ப நீங்கள் ஒவ்வொருவரும் இதில் பங்கு பெற வேண்டும். உங்களில் ஒருவனான நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாபெரும்  கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய்யின் தந்தையும், புரட்சி இயக்குநரும், விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை வகிக்கிறார். இளைய தளபதி விஜய் கலந்துக் கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கியும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியும் கண்டன பேரூரை ஆற்றுகிறார்.

பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கத் தலைவர் சி.ஜெயசீலன், செயலாளர் ஆர்.ரவிராஜா, துணைத்தலைவர் சி.ராஜேந்திரன், துணைச் செயலாளர் ஏ.சி.குமார், மாநில மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் விஜய் சரவணன், நாகை நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தலைவர் எம்.சுகுமார் மற்றும் நிர்வாகிகள் ஜே.சுதாகர், எம்.பத்ரிநாதன், எல்.கிருபாகரன், ஜி.நாகேந்திரன், ரவி, உதயகுமார், எஸ்.என்.அருண் சிறப்பாக செய்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: