குவாத்ரேச்சி மீதான வழக்கு கைவிடப்படுமா? தீர்ப்பு தள்ளிவைப்பு

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      ஊழல்
Quattrocchi-ap

 

புது டெல்லி,பிப்.22 - சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலான போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி மீதான வழக்கை கைவிட வேண்டும் என சி.பி.ஐ. கோரியிருந்த வழக்கில் தனது தீர்ப்பை மார்ச் 4 ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது டெல்லி கோர்ட். 

இந்திய ராணுவத்துக்கு சுவீடன் நாட்டில் இருந்து போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ரூ 64 கோடி கமிஷன் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி உட்பட பலர் குற்றம் சாட்டப்பட்டனர். ரூ 64 கோடி கமிஷன் தொடர்பான இந்த வழக்கிற்கு இதுவரை ஆன செலவு ரூ 250 கோடிக்கும் மேலாகி இருக்கும். ஆனால் இந்த வழக்கில் யாருமே தண்டிக்கப்படவில்லை. 

குற்றம் சாட்டப்பட்ட குவாத்ரோச்சி மீதான வழக்கை கூட வாபஸ் பெற வேண்டும் என்கிறது சி.பி.ஐ. கடந்த 2009 அக்டோபர் மாதம் இந்த வழக்கை வாபஸ் பெற கோர்ட்டின் அனுமதியை கோரியது சி.பி.ஐ. முன்னதாக குவாத்ரோச்சி மீது கமிஷன் பெறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிலையிலும் அவர் மீதான வழக்கை வாபஸ் பெற சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்த கோரிக்கை மீதான தனது உத்தரவை டெல்லி தலைமை மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் வினோத்யாதவ் வரும் மார்ச் 4 ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளார்.  குற்றம் சாட்டப்பட்டுள்ள குவாத்ரோச்சி இதுவரை விசாரணைக்காக இந்திய கோர்ட்டில் ஆஜராகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: