முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெசோ அமைப்பின் `பந்த்': இன்று பஸ்கள் ஓடும்

திங்கட்கிழமை, 11 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.12 - இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் இன்று (12-ந் தேதி) பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது. 

இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்ல இது நேரமல்ல. நமது உணர்வுகளை காட்டிட அனைவரும் ஒத்துழைத்து வேலை நிறுத்தத்தை வெற்றியாக்கி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதேபோல் மின் கழக தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி விடுத்துள்ள அறிக்கையில் இன்று நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆதரவா? இல்லையா? என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் கம்யூனிஸ்ட், பா.ம.க. ஆகிய கட்சிகள் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்து விட்டன. பா.ஜனதாவும் வேலை நிறுத்தத்தை ஆதரிக்காது என்று மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். வணிகர் சங்க பேரவை கடை அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடைகளை அடைக்கும்படி வணிகர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறி உள்ளார். 

பந்த் போராட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் இவ்வாறு இருக்க இன்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் பஸ்கள் வழக்கம்போல் ஓடும். இது தொடர்பாக போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தற்செயல் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து ஊழியர்களும் இன்று பணிக்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம்போல் இருக்கும். அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதை சமாளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாததால் ஆட்டோக்களும் வழக்கம்போல் இயங்கும். சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறும்போது, நாங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் 65 ஆயிரம் ஆட்டோக்கள் உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் ஆட்டோக்கள் உள்ளன. நாளை (இன்று) வழக்கம் போல் ஓடும் என்றார். 

தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோக்கள் மட்டும் ஓடாது. பந்த் போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்