முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஏ.எஸ். தேர்வு முறையில் மாற்றம்: திரும்பப் பெற கடிதம்

புதன்கிழமை, 13 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை,மார்ச் 13 - சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றமானது இந்தி பேசாத மாணவர்களை வெகுவாக பாதிக்கும் என்பதால் அந்த மாற்றத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது தேர்வு முறையில் மாற்றம் செய்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் முதன்மை தேர்வில் (பூர்வாங்க தேர்வில்) இந்தி பேசாத மக்களை பாதிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிராமபர்புறங்களில் இருந்து கஷ்டப்பட்டு படித்து வரும் மாணவர்களை அதிக அளவில் பாதிக்கும் வகையில் உள்ளது. அதாவது மாநில மொழிகளில் தேர்வு எழுதுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநில மொழிகளில் தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் 25 மாணவர்கள் அந்த மொழியில் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த விதிமுறை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிக்கு பொருந்தாது. அதேபோல் பட்டப்படிப்பில் எந்த மொழி வாயிலாக மாணவர்கள் பயின்றார்களோ அந்த மொழி வாயிலாகவே பூர்வாங்க தேர்வு எழுத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும். தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக யார் வேண்டுமானாலும் தேர்வு செய்து படிக்கலாம் என்று இருந்தது. இப்போது தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே அதை விருப்பப்பாடமாக தேர்வு செய்ய முடியும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது மிகவும் பாரபட்சமானது இந்தி பேசாத மாணவர்களுக்கு அநீதியானது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த மாற்றத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளதாவது:-

2013-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எஸ்.,ஐ.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றமானது பாரபட்சமாகவும் அநீதியாகவும் உள்ளது. தேர்வு முறையில் பெரிய அளவில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றமானது தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும். அதுவம் கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும். உயர்நிலைப்பள்ளி அளவில் தமிழ் மொழி வாயிலாகவும் அதன் பின்னர் ஆங்கிலம் மூலம் பட்டப்படித்தவர்கள் தமிழில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதலாம் என்று விதிமுறை இருந்தது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தற்போது பட்டப்படிப்பு வரை தமிழ் மொழியில் படித்திருந்தால்தான் தேர்வில் விருப்பபாடங்களை முதல்நிலை தேர்வை எழுத முடியும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மாணவர்கள் தங்களுடைய தாய் மொழியில் தேர்வு எழுத மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் இந்தி மொழியில் தேர்வு எழுத விரும்புவர்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லை. அரசியல் சட்டம் 8-வது அட்டவணையில் இந்தி, தமிழ் மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் இந்த மாற்றமானது தமிழ் மாணவர்களுக்கு மட்டுமல்லாது இந்தி பேசாத இதர மொழி மாணவர்களுக்கு குறிப்பாக ஆதிதிராவிடர், மலை ஜாதியினர், பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது, பாரபட்சமானது. மேலும் பள்ளி அளவில் தாய் மொழியல் படித்த ஒருசில குறைந்தபட்ச எண்ணிக்கையை உடைய சமூகத்தை சேர்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும். இது இந்திய அரசியல் சட்டப்பிரிவு 14 மற்றும் 16 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதும் மாணவர்களுடன் ஒப்பிடும்போது தமிழ் மற்றும் இதர மொழிகளில் படித்த மாணவர்களை வெகுவாக பாதிக்கும். 

தேர்வாணையம் செய்துள்ள இரண்டாவது மாற்றமானது மிகவும் ஆட்சேபகத்திற்குரியது மட்டுமல்லாது பாரபட்சமானதும் கூட. தேர்வில் விருப்பப்பாடமாக விரும்பும் இலக்கியத்தை எடுக்க வேண்டுமானால் அதே இலக்கியத்தை பட்டப்படிப்பில் விருப்பப்பாடமாக படித்திருக்க வேண்டும். அதாவது தமிழ் இலக்கியம் விருப்பப்பாடமாக எடுக்க வேண்டுமென்றால் பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக படித்திருக்க வேண்டும். இந்த இரண்டாவது மாற்றமானது பாரபட்சமன்றி சட்டவிரோதமானது. வேறு பாடத்தை விருப்பமாக எடுப்பவர்களுக்கு இந்த மாற்றம் செய்யப்படவில்லை. கணிதப்பாடம் படிப்பவர்கள் தேர்வில் விருப்பப்பாடமாக வரலாறு பாடத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதேசமயத்தில் தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த மாற்றமானது சட்டவிரோதமானது, பாரபட்சமானது, நியாயமற்றதாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேர்வு எழுத வேண்டுமென்றால் குறைந்தது 25 மாணவர்களாவது இருக்க வேண்டும். ஆனால் இந்தி, ஆங்கில மொழியல் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த மாற்றமானது அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமஉரிமையை மீறுவதாகும். தேர்வில் 4-வதாக செய்யப்பட்டுள்ள மாற்றமானது இந்திய மொழியல் ஏதாவது ஒன்றில் கட்டாயம் தேர்வு பெற்றிருக்க வேண்டும் என்பதை மாற்றி, அதற்கு பதில் ஆங்கிலத்தில் கட்டுரைகள்,சுருங்க எழுதுதல் ஆகியவற்றை சேர்த்து இருப்பது நகரப்புற மாணவர்களுக்கு சாதகமாகவும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். 

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் செய்துள்ள இந்த 4 மாற்றங்களும் இந்திய கூட்டமைப்பு கொள்கைகளிலும்,அரசியல் சட்டத்தில் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் இதர மொழிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள சமஉரிமையை பாதிக்கும். இந்திய அரசியல் சட்டம் 16-வது பிரிவில் அரசு பணியாளர் நியமன உரிமையை பாதிக்கும். கிராமப்புற மாணவர்கள், பள்ளியில் தாய்மொழியிலும் பட்டப்படிப்பை இதர மொழிகளிலும் படித்து வரும் மாணவர்களை வெகுவாக பாதிக்கும். அரசியல் சட்டம் 8-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் சம அந்தஸ்து கொடுக்க வேண்டும். தேர்வை எந்த மொழியிலும் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். குறிப்பாக அவர்களின் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையமானது இந்த பிற்போக்கான மாற்றங்களை செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது, ஒருதலைப்பட்சமானது மட்டுமல்லாது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக அளவில் பங்கு பெற்று பிரதிநிதித்துவம் பெறுவதை மறுப்பதாகும். இந்த மாற்றமானது இறுதியில் இந்தியாவில் நிர்வாகத் திறமையை பாதிக்கும். அதனால் இந்த விஷயத்தில் நீங்கள் (பிரதமர் மன்மோகன்சிங்) தலையிட்டு தேர்வாணையம் செய்துள்ள இந்த பாரபட்சமான,நியாயமற்ற மாற்றத்தை திரும்பப்பெறுவது குறித்து பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இந்த மாற்றமானது தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை பாதிக்கும். அதனால் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்