இஸ்லாமாபாத், ஏப். 15 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் அதிபர் முஸாரப்புக்கு சம்மன் அனுப்பி இருந்தும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை வரும் 23 ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஹபீப்உர் ரஹ்மான், முஸாரப் அன்றைய தேதியில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்ப ஆணையிட்டார். பெனாசிர் கொலை வழக்கு விசாரணை ராவல்பிண்டி அடியாலா சிறையில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முஸாரப் உள்ளிட்டோர் ஆஜராக ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் முஸாரப் ஆஜராகவில்லை. ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்து 2 முறை முஸாரப்புக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முஸாரப் தலைமறைவு குற்றவாளி என நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்தது. விசாரணையில் அவர் ஒத்துழைக்கவில்லை என்று அறிவித்து அவரை கைது செய்வதற்காக வாரண்டும் பிறப்பித்தது. 2007 ம் ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி ராவல்பிண்டியில் உள்ள லியாகத்பாஹில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிறகு பெனாசிர் துப்பாக்கி தாக்குதல் மற்றும் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.
2007 ல் நாடு திரும்பிய பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முஸாரப் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2011 பிப்ரவரியில் இந்த வழக்கில் முஸாரப்பை குற்றம் சாட்டப்பட்டவராக அறிவித்த பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அதே ஆண்டு ஆகஸ்ட்டில் முஸாரப் தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்தது. முஸாரப் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.