முக்கிய செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் நடிகர் ஷைனி அஹுஜாவுக்கு ஜாமீன்

shiney-ahuja 0

 

மும்பை, ஏப்.28 - வேலைக்கார பெண்ணை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷைனி அஹுஜாவுக்கு மும்பை ஐகோர்ட் நேற்று ஜாமீன் வழங்கியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷைனி அஹுஜா தன்னை கற்பழித்துவிட்டதாக அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருவர் ஷைனி மீது புகார் செய்தார். இதையடுத்து நடிகர் ஷைனி அஹுஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மார்ச் 30 ம் தேதி அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். செசன்ஸ் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஷைனி அஹுஜா மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த ஜாமீன் மனு மீது மும்பை ஐகோர்ட் நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி விசாரணை நடத்தினார். அதன்பிறகு அஹுஜாவை ரூ.50 ஆயிரத்திற்கான பாண்ட் பத்திரம் செலுத்தி ஜாமீனில் விடுதலையாக உத்தரவிட்டார். அவர் குற்றவாளி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரை மேலும் காவலில் வைத்திருக்க தேவையில்லை. எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். ஆனால் கோர்ட்டின் முன் அனுமதி பெறாமல் இந்தியாவை விட்டு அஹுஜா வெளியேறக் கூடாது என்றும் நீதிபதி கட்டளையிட்டுள்ளார். 

நடிகர் மீது எந்தவிதமான கற்பழிப்பு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருந்தும் அவர் குற்றவாளி என்று செசன்ஸ் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மும்பை ஐகோர்ட்டில் வழக்காடுவோம் என்றும் ஷைனி அஹுஜாவின் வழக்கறிஞர் ஷிரிஸ் குப்தே தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: