கர்நாடகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல்

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,மே.4 - கர்நாடக மாநிலத்தில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. முன்னதாக அரசியல் தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் சட்டசபை பதவிக்காலம் முடிவதால் நாளை (5-ம் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இவ்வாறு அறிவித்ததும் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது. 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் இறந்துவிட்டதால் அந்த தொகுதியில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் பாரதிய ஜனதாவில் இருந்து விலகிய எடியூரப்பா புதியதாக தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதலில் கட்சின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா ஆட்சியை கடுமையாக தாக்கி பேசினார். உலகத்திலேயே இந்த அரசு மாதிரி ஊழல் அரசு எதுவும் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். அவரை அடுத்து அவரது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரபிரசாரம் மேற்கொண்டார். பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் பாரதிய ஜனதா தலைவர்களும் தங்களுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர். அப்போது காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அவர்கள் பதில் அளித்தனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, அனந்த சர்மா ஆகியோரும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் குறிப்பாக ஹூப்ளி பகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் கிடைத்த வெற்றியதால்தான் கடந்த தேர்தலின்போது பாரதிய ஜனதா 105 தொகுதிகளில் வெற்றிபெற முடிந்தது. மதசார்பாற்ற ஜனதாதளமும் தீவிரபிரசாரத்தை மேற்கொண்டது. அந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவுகவுடா, முன்னாள் முதல்வரும் அவரது மகனுமான குமாரசாமி மற்றும் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தனர். கர்நாடக ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து எடியூரப்பாவும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. ஓட்டுப்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் நிறைந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளுக்கு எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பும்பணியில் அரசு அதிகாரிகள், போலீசார், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: