திருவனந்தபுரம், மே. 18 - கேப்டன் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசி விட்டேன். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். கேரள மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் கூறியுள்ளார்.
ஸ்ரீசாந்த்தை ஸ்பாட் பிக்ஸிங் புகாரின் பேரில் போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர், கேப்டன் தோனியும், ஹர்பஜன் சிங்கும்தான் இதற்குக் காரணம். பஞ்சாப் டி.எஸ்.பி. ஒருவரை வைத்து இந்த சதியை அரங்கேற்றியுள்ளார் ஹர்பஜன் சிங். தோனியும், ஹர்பஜனும் சேர்ந்து எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார். தற்போது தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் கைது செய்யப்பட்டதைக் கேட்டதும் எனக்கு எதுவும் ஓடவில்லை. அந்த நேரத்தில் ஏற்பட்ட பதட்டத்தில் தோனி, ஹர்பஜன் குறித்துப் பேசி விட்டேன். இதற்காக நான் தோனி, ஹர்பஜன் சிங்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கேரள மக்களும் என்னை மன்னிக்க வேண்டும் என்றார் நாயர்.