முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானியை கொல்ல முயன்ற வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்.ஜூலை.9 - திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்து பாரதீயஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை கொல்லமுயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்காசியைச் சேர்ந்த முகமதுஅனிபா என்ற வாலிபரை வத்தலகுண்டு அருகில் வைத்து கைதுசெய்த தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அவரிடமிருந்து பயங்கர வெடிப்பொருட்களையும்,ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த இருஆண்டுகளுக்கு முன்பு ரதயாத்திரை வந்த பாரதீயஜனதா கட்சியின் மூத்ததலைவர் எல்.கே.அத்வானியை திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப்வெடிகுண்டுவைத்து கொல்லசதி நடைபெற்றது.இதனை பொதுமக்கள் உதவியுடன் கண்டுபிடித்த போலீசார் கொலைச் சதியை திறம்பட முறியடித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கினை தமிழக சிறப்பு புலனாய்வு படை போலீசரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து அதிரடியாக களமிறங்கிய புலனாய்வு படையினர் மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை இவ்வழக்கில் கைதுசெய்திருந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள பரசுராம்பட்டியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபரொருவர் தங்கியிருப்பதாக சிறப்பு புலனாய்வு படையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் சிறப்பு புலனாய்வு படை டி.ஐ.ஜி.,ஜான்நிக்கல்சன் தலைமையில் எஸ்.பி.,விஜயகுமாரி,டி.எஸ்.பி.,கார்த்திகேயன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் சம்பவ பகுதியை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அத்வானியை ஆலம்பட்டி பாலத்தில் குண்டுவைத்து கொல்லமுயன்ற சதிதிட்டத்தில் முக்கியநபரான தென்காசியைச் சேர்ந்த முகமதுஅனிபா(எ)நாகூர்அனிபா(35) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து முக்கியகுற்றவாளியான முகமதுஅனிபா தங்கியிருந்த மறைவிடத்தை சோதனையிட்ட போலீசார் அங்கு மறத்துவைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் அத்வானி கொலைச்சதியில் முக்கிய பங்காற்றிய முகமதுஅனிபாவை முறைப்படி கைது செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அவனை திருமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர்.இதைதொடர்ந்து முகமதுஅனிபாவை வரும் 22ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைத்திடுமாறு நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முகமதுஅனிபா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டான்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு புலனாய்வு படை டி.ஐ.ஜி.,ஜான்நிகல்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பாரதீயஜனதா கட்சியின் மூத்ததலைவர் அத்வானியை ஆலம்பட்டி பாலத்தில் குண்டு வைத்து கொல்லமுயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்காசியைச் சேர்ந்த முகமதுஅனிபா(எ)நாகூர்அனிபாவை வத்தலகுண்டுவில் வைத்து கைது செய்துள்ளோம்.மேலும் அவனிடமிருந்து வெடிபொருட்களும்,பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கு தொடர்பாக பிலால்மாலிக்,போலீஸ்பக்ருதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.தென்காசி இந்து முன்னணி தலைவர் குமார்பாண்டியன் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் முகமதுஅனிபாவுக்கு நிலுவையிலிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony