முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் வேட்பாளராக மோடி: அத்வானியே அறிவிக்கிறார்!

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

டெல்லி, ஜூலை. 10 - பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த அறிவிப்பை மூத்த பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானியே வெளியிடுவார் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குஜராத் மாநில முதல்வராக 12 ஆண்டுகாலம் சிறப்பாக செயல்பட்டு வரும் நரேந்திர மோடி அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதே அவர்தான் பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளர் என்று உறுதியானது. ஆனால் இதற்கு எதிராக மூத்த பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி கலகக் குரல் எழுப்பிப் பார்த்தார். இருப்பினும் நரேந்திர மோடியை பா.ஜ.க. வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். உறுதியாக ஆதரித்ததால் அத்வானியின் குரல் எடுபடவில்லை. 

இதைத் தொடர்ந்து அத்வானியும் சமாதானமாகிவிட லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்களை வகுப்பதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம்காட்டி வருகின்றனர். பா.ஜ.க.வின் அத்வானி, ராஜ்நாத்சிங் என ஒவ்வொருவருவாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புகளிலும் மோடியை முன்னிறுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். உறுதியாக இருப்பது தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்பதில் பாரதிய ஜனதா கட்சி இறுதி முடிவெடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் மோடிக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு என்பதை பொய் என சொல்லும் வகையில் நரேந்திர மோடியின் பெயரை எல்.கே. அத்வானியே அறிவிப்பது என்றும் அக்கட்சி முடிவு எடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட இருக்கிறார். லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட இருக்கும் மோடி, உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இத்தொகுதியின் எம்.பி.யாக தற்போது பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளிமனோகர் ஜோஷி இருக்கிறார். வரும் தேர்தலில் அவருக்கு வேறு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்