புத்தகயா குண்டு வெடிப்பில் 4 பேருக்கு தொடர்பு: ஷிண்டே

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கயா,ஜூலை.11 - புத்தகயா கோயில் வளாகத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 அல்லது 4 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் வரலாற்று சிறப்பு மிக்க புத்தகயா கோயிலில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு நடத்தியுள்ளனர். இதில் 2 புத்தமத துறவிகள் படுகாயம் அடைந்தனர். சக்திகுறைந்த வெடிமருந்து பொருட்களை பயன்படுத்தியிருந்தால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலில் தீவிரவாதிகள் குண்டுவெடித்திருப்பது நாடே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதனையொட்டி இந்த கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதற்கிடையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவும் பார்வையிட்டனர். பின்னர் ஷிண்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புத்தகயா கோயிலில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 3 முதல் 4 பேர் வரை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விரிவான முறையில் விசாரணை நடத்தி வருகிறது. புனித மிக்க புத்தர் கோயில் வளாகத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைதி தழுவும் பூமியில் நாசவேலையை ஏற்படுத்த தீவிரவாதிகள் முயன்றிருப்பது கவலையளிக்கக்கூடிய விஷயம். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ.க்கு இணையான இரண்டு புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புலனாய்வு அமைப்புகள் பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது என்றும் ஷிண்டே கூறினார். நாங்கள் முழு விசாரணை நடத்தி வருகிறோம். சுமார் 4 பேர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. பீகார் அரசு கேட்டுக்கொண்டதின்பேரில் தேசிய புலனாய்வு அமைப்பிடம் விசாரணையை ஒப்படைத்துள்ளோம். புத்தர்கோயில் வளாகத்தில் 13 குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவைகளில் 10 குண்டுகள் வெடித்தன. 2 முதல் 3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து டெட்டோனேட்டர் மூலம் அந்த குண்டுகள் வைக்கப்பட்டுவெடிக்கப்பட்டுள்ளது. அருகில் ஒரு கடிகாரமும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததுள்ளது. இந்த குண்டுகளில் 10 குண்டுகள் சம்பவம் நடந்த அன்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வெடித்துள்ளன என்றும் ஷிண்டே மேலும் கூறினார். 

குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை யாரையும் ஏன் கைது செய்யவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஷிண்டே, அவசரப்பட்டு யாரையும் கைது செய்வது சரியல்ல. விரிவான முறையில் விசாரணை நடத்த வேண்டும். அதன் பிறகுதான் கைது செய்ய வேண்டியவரை கைது செய்யப்படும் என்றும் ஷிண்டே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: