சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தேர்தல் ஆணையர் வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பாரோ, ஜூலை. 13 - குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் வரவேற்றுள்ளார். தேர்தல் சீர்திருத்த நடவடிக்கையில் மிக நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த இந்த பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டு விட்டது என்று அவர் குறிப்பிட்டார். பூடானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நடைமுறைகளை பார்வையிடுவதற்காக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் இது குறித்து மேலும் கூறியதாவது, 

தேர்தலில் போட்டியிடுவோருக்கும், தனி நபருக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. குற்ற பின்னணி மற்றும் வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதன் மூலம் அரசியலில் இத்தகையோர் இறங்குவதை தடுக்க முடியும். இப்போது சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு அரசியலை தூய்மைப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று குறிப்பிட்டார். 

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று அவர் மேலும் கூறினார். 

தேர்தல் நடைபெறுவதற்கு 6 வாரம் அல்லது 8 வாரங்களுக்கு முன்னதாக தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவை பதவிக்காலம் டிசம்பர் மாதம் 12 முதல் ஜனவரி மாதம் 4 ம் தேதி வரையிலான காலத்தில் முடிவடைகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: