என்.எல்.சி. பங்கு விற்பனை: செபியுடன் அரசு ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 13 - என்.எல்.சி. யின் 5 சதவீத பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பது குறித்து இந்திய பங்கு பரிவர்த்தனை வாரிய அதிகாரிகளுடன் டெல்லியில் உள்ள மத்திய பங்கு விலக்கல் துறை அதிகாரிகள் வரும் 15 ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளனர். 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதிக்குள் விற்க வேண்டும் என்று செபி கெடு விதித்துள்ளது. அதையடுத்து அரசு துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. என்.எல்.சி.யின் 6.44 சதவீத பங்குகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன. இந்நிலையில் செபி விதித்த நிபந்தனையின்படி 5 சதவீத பங்குகளை விற்க என்.எல்.சி. நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை கேட்டுக் கொண்டது. என்.எல்.சி.யின் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்க செபி அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்தாலும் விதிகளின் படி சில நடைமுறைகளை மீறி இந்த திட்டத்தை செயல்படுத்த செபி விலக்கு அளிக்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வரும் 15 ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிப்பதற்காக வரும்படி செபி அதிகாரிகளுக்கு மத்திய பங்கு விலக்கல் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். 

இக்கூட்டத்தில் தேவைப்பட்டால் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய பங்கு விலக்கல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் கூறும் போது, பங்கு விற்பனை தொடர்பாக தமிழக தரப்பிடமும் செபி அதிகாரிகளிடமும் ஓரிரு முறை பேச்சு நடத்தப்படும் என்று மத்திய பங்கு விலக்கல் துறையிடம் இருந்து தகவல் வந்துள்ளது. அதனால் இந்த நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: