சோலார் பேனல் மோசடி: ஷாலு மேனன் மீது புது வழக்கு

புதன்கிழமை, 17 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 18 - சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை சாலுமேனன் மீது, பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சாலுமேனன் கைது செய்யப்பட்டார். அவரை 20 ம் தேதி வரை சிறையில் அடைக்க திருவனந்தபுரம் மாவட்ட முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பிஜு ராதாகிருஷ்ணன் திருச்சூரில் இருந்து கோவைக்கு தப்பி செல்ல சாலுமேனன் உதவியதாக பெரும்பாவூரை சேர்ந்த சஜாத் என்பவர் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். 

போலீசார் நடத்திய விசாரணையில் சாலுமேனனின் காரில் பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி செல்ல உதவியதாக சாலுமேனன் மீது பெரும்பாவூர் போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஜாமீன் கோரி சாலுமேனன் கேரள ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: