சிறாருக்கான வயது வரம்பை குறைக்கவே முடியாது

புதன்கிழமை, 17 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.18 - சிறாருக்கான வயது வரம்பை குறைக்கவே முடியாது என்றும் சிறார்களுக்கான சட்டவிதிகளிலும் மாற்றம் செய்ய முடியாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சிறார்களுக்கான வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி பஸ்சில் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார். இதனால் தலைநகர் டெல்லி மட்டுமல்லாது நாடே கொந்தளித்துவிட்டது. இந்த சம்பவத்தில் பஸ் டிரைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவனுக்கு வயது 17 அதனால் அவன் மீது வழக்கு பதிவு செய்ய முடியவில்லை. இதனையொட்டி சிறாருக்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. அந்த சிறுவனுக்கு தண்டனையை அதிகம் கொடுக்கும் வகையில் சிறார்களுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக  குறைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான மனுவை வழக்கறிஞர்கள் கமல் குமார் பாண்டே, சுகுமார் செளத்ரி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்திருந்தனர். சிறார்கள் குற்றங்களை விசாரிக்கும்போது அவர்களுக்கான வயது வரம்பு 18 என்று கோர்ட்டு முடிவு செய்வது கிரிமினல் நீதிமன்ற முறைக்கு மாறாக இருக்கிறது. சிறார்கள் தவறு செய்யாதபடி உறுதி செய்யும்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் சமூகத்தினர் விரும்புகின்றனர். அதனால் சிறார்களுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். இந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. நேற்று இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறார்களுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க முடியாது என்றும் சிறார் சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையான பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்கள் உரிமைக்கான மாநாடு கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது சிறார்களுக்கான வயது வரம்பு 16-ல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் டெல்லியில் நடந்த கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுவனுக்கு அதிகப்பட்சமாக 3 ஆண்டுகள்தான் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த சிறுவன் மீதான வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மீதி 4 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை இன்னும் 3 மாதங்களில் முடிவடையும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: