வன்முறையை தூண்டும் விதமாக மம்தா கட்சி நிர்வாகி பேச்சு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை. 19 - பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைகளின் வீடுகளை எரிக்கவும், போலீசார் மீது குண்டுகளை வீசவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுபிரதா மோண்டல் தொண்டர்களை தூண்டிவிட்டுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பிர்பாம் மாவட்ட தலைவர் அனுபிரதா மோண்டல். அவர் போல்பூர் துணை பிரிவில் உள்ள கஸ்பா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில்,

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் உங்களை மிரட்டினால் அவரது வீட்டை எரித்து விடுங்கள். அவருக்கு வாக்களிக்காதீர்கள். அவர்களுக்கு நிர்வாகம் ஆதரவு தெரிவித்தால் போலீசார் மீது குண்டுகளை வீசுங்கள் என்றார்.

அவர் அப்படி பேசியபோது விவசாயத் துறை அமைச்சர் மலாய் கடக் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹா ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்காததால் சுயேட்சையாக போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவரின் வீடு நேற்று எரிக்கப்பட்டது. அவரது வீட்டை எரிக்கும் முன்பு வீட்டில் இருந்த நகை, பணத்தை அந்த கும்பல் சூறையாடியது என்று சுயேட்சை வேட்பாளரின் மனைவி தெரிவித்துள்ளார். அனுபிரதாவின் பேச்சைக் கேட்டு தான் தன் வீடு எரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வேட்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: