முக்கிய செய்திகள்

2 ஜி வழக்கில் கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 7 மே 2011      ஊழல்
kanimozhi 1

புதுடெல்லி, மே 8-
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இம்மாதம் 14 ம் தேதிவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை கனிமொழி தினமும் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ம் தலைமுறையினருக்கான (2 ஜி.) தொழில்நுட்ப வசதியை அளிப்பதற்காக தொலைத் தொடர்புத் துறை சார்பில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த உரிமங்களை அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தான் வழங்கியுள்ளார். இந்த ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மத்திய கணக்கு தணிக்கைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்த இழப்புக்கு அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாதான் முழுப்பொறுப்பு என்றும் அந்த குழு குற்றம் சாட்டியுள்ளது. இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான் என்று அமெரிக்க பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு இருந்தன. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கவே, தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இந்த ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி  ஆ.ராசா அவரது உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து ஆ.ராசாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள்  பிறகு ராசாவை கைது செய்து தங்கள் காவலில் எடுத்தனர். சி.பி.ஐ. காவல் முடிந்ததும் ஆ.ராசா டெல்லியில் உள்ள அதிக பாதுகாப்பு மிக்க திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதும் இவர் இதே சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில்  ஆ.ராசாவின் உதவியாளர்களான சந்தோலியா, சித்தார்த் பெகூரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட மேலும் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆ.ராசா உள்ளிட்ட இவர்கள் 9 பேரும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சட்ட விரோதமாக ஆதாயமடைந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டதாக கலைஞர் டி.வி. பிறகு தெரிவித்தது. இருந்தாலும் அந்த ரூ.214 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்பது மர்மமாகவே இருந்தது. இந்த கலைஞர் டி.வி.யில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீதமும், நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் கடந்த ஏப்ரல் 25 ம் தேதி சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் கனிமொழி கூட்டுச் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து இவர்கள் இருவரையும் மே 6 ம் தேதி சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இவர்கள் இருவரும் நேற்று முன்தினம்(மே 6) இந்த கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது கனிமொழி சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதாடினார். கனிமொழி, சரத்குமார் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் வாத பிரதிவாதங்கள்  முடிவடையாத நிலையில் இந்த விசாரணயை நீதிபதி ஷைனி நேற்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி நேற்றும் இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது  கலைஞர் டி.வி.யை கனிமொழிதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் அவரே கவனிக்கிறார். இந்த கலைஞர் டி.வி.தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற பால்வா குழுமத்திடம் இருந்து ரூ. 200 கோடியை பெற்றுள்ளது எனவே கனிமொழிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது  என்று சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித் வாதாடினார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் அந்த டி.வி.யை நிர்வகிப்பவராக இருக்கலாம். ஆனால் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் கட்டுப்பாடுகளையும் இயக்குபவர் கனிமொழிதான் என்றும் எனவே கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதை தாம் ஆட்சேபிப்பதாகவும் அவர் கூறினார்.
கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கும் அவரது குடும்பத்திற்கும் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன. அந்த கலைஞர் டி.வி.க்குத்தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை   சட்டவிரோதமாக பெற்ற நிறுவனத்தினரிடம் இருந்து ரூ. 200 கோடி சென்றது என்றும் லலித் வாதாடினார். இந்த ரூ.200 கோடி பரிமாற்றத்தில் கனிமொழிக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரம் உள்ளது என்றும் சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதாடினார். ரூ. 200 கோடி பணப் பரிமாற்றத்தில் கனிமொழி, சரத்குமார் இருவருக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  எனவே இவர்கள் இருவருக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்கக்கூடாது என்றும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிற குற்றவாளிகளைப் போல நீதிமன்ற காவலுக்கு (சிறைக்கு) அனுப்ப வேண்டும் என்றும் லலித் தனது வாதத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்த கலைஞர் டி.வி.யில் 80 சதவீத பங்குகள் கருணாநிதி குடும்பத்தினருக்கே இருப்பதால் நிதி பரிவர்த்தனை தொடர்பான அனைத்து முடிவுகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் கலைஞர் டி.வி.யில் உள்ளன. ஆனால் இந்த டி.வி.யின் நிர்வாக பணிகளில் அவர் தீவிரமாக எதிலும் ஈடுபடவில்லை. அந்த டி.வி.யை 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியும், சரத்குமாரும்தான் நிர்வகித்து வருகிறார்கள் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த ஜாமீன் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி ஓ.பி.ஷைனி, இவற்றின் மீதான தீர்ப்பை வருகிற 14 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை கனிமொழியும், சரத்குமாரும் தினமும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்: