முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா மருமகனின் நிலமோசடி விவகாரம்: பா.ஜ.க. அமளி

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 14 - காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில மோசடி விவகாரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் நகரில் ஏற்பட்ட கலவரங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி அமளியில் ஈடுபட்டதை அடுத்து பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நேற்று நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டன. 

முன்னதாக நேற்று பாராளுமன்ற லோக்சபையில் கேள்வி நேரம் தொடங்கியதும் சில உறுப்பினர்கள் எழுந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் ஏற்பட்ட வகுப்பு மோதல் தொடர்பாக பிரச்சினை எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியின் யோகி ஆதித்யாநாத் எழுந்து பேசுகையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை கடுமையாக தாக்கி பேசினார். கிஸ்துவார் கலவரம் தொடர்பாக யோகி பேசினார். அப்போது பேசிய அவர், 

மாநில உள்துறை அமைச்சர் முன்னிலையிலேயே ஜம்முவில் மத வழிபாட்டு தலங்கள் குறி வைத்து தாக்கப்பட்டன என்று குற்றம் சாட்டினார். இந்த குழப்பத்திற்கு மத்தியில் பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா எழுந்து ராபர்ட் வதேராவை பெயர் சொல்லாமல் தாக்கி பேசினார். அவர் பேசுகையில், நமது நாட்டிலும் சரி, இந்த உலகத்திலும் சரி, ஏராளமான நல்ல வர்த்தக பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகள் கோடிக்கணக்கான பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று தனியார் வர்த்தகர்களுக்கு போதிக்கின்றன. ஆனால் நமது நாட்டிலோ வர்த்தக பள்ளிக்கே போகாதவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள் என்று நகைச்சுவையோடும், கிண்டலோடும் பேசினார். 

அவர் இவ்வாறு பேசியது ஆளும் கட்சி தரப்பில் வெறுப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் சபாநாயகர் மீராகுமார் சபையை நண்பகல் வரை ஒத்தி வைத்தார். ராஜ்ய சபையிலும் இதே நிலை நீடித்தது. இதனால் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறி எம்.பி.க்களுக்கு சபை தலைவர் ஹமீத் அன்சாரி கடும் எச்சரிக்கை விடுத்தார். விதிமுறைகள் மீறப்படுகின்றன. இந்த சபை அராஜக கும்பலின் தொகுப்பாகி விட்டது என்று ஆவேசத்தோடு அன்சாரி கூறினார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனிடையே பாராளுமன்றத்தில் ராபர்ட் வதேரா விவகாரம் குறித்து எந்த விவாதத்துக்கும் அனுமதிக்க முடியாது என்று காங்கிரஸ் கூறி விட்டதாக தெரிகிறது. ஆனால் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் சோனியா மருமகனின் நில மோசடி பற்றி விவாதம் நடத்தியே தீர வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தின. இதனால் நேற்று பாராளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுப் போனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்