முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்றுநோய் மருத்துவம்: ஒருங்கிணையும் இந்தியா - பிரிட்டன்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்டம்பர் 9 -  உலகில் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் தான் புற்றுநோய்த் தாக்கத்தின் விகிதம் அதிகமாக உள்ளது. எனவே இரு நாடுகளும் இணைந்து இந்த நோய்க்கான மருத்துவ முறைகளை செயல்படுத்த முடிவெடுத்துள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்று நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த அரங்கில் நோய்த்தாக்கம், நோயின் வகைகள் அவற்றின் மருத்துவமுறைகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.  

 இந்தக் கருத்தரங்கு சாதாரணமாக தோன்றக்கூடிய 16 வகையான புற்றுநோய்கள் பற்றியும், அவற்றுக்குண்டான மருத்துவ முறைகள் பற்றியும் குறிப்பாக கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுமே புற்றுநோய்க்கு எதிரான பொதுவான சவால்களை எதிர்கொள்ளுகின்றன. இங்கிலாந்தில் முன்னேற்றமடைந்த நவீன மருத்துவமுறைகள் பயன்படுத்தப்படுவதால் அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாமும் அறிந்துகொள்ள முடியும் என்று இந்தோ பிரிட்டிஷ் ஹெல்த் இனிஷியேடிவ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் தெரிவித்தார்.  

 இந்தியாவில் உள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தப்படும் நவீன சிகிச்சைமுறைகளை அறிந்துகொண்டால் உள்ளூர் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை அளித்தல் சாத்தியப்படும் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் சாந்தாராம் தெரிவித்தார்.

 நோயாளிகளின் தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் இங்கிலாந்து அந்நாட்டில் புற்றுநோய் சாத்தியங்களை மிகவும் குறைத்துள்ளதாக அங்குள்ள கிறிஸ்டி மருத்துவமனையின் என்எச்எஸ் அமைப்பில் பணிபுரியும் செல்லையா செல்வகுமார் கூறினார். புற்றுநோய் அதிகரிப்பதைத் தடுக்க மிகச் சிறந்த மருத்துவர்கள், நவீன உபகரணங்கள், மருந்துகள் மற்றும் உலகத் தரத்திலான ஆய்வுமுறைகள் போன்றவற்றில் இந்தியாவிற்கு உதவி செய்யமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  

 இந்த நோயினை ஆரம்ப நிலையில் கண்டறிதல் குறித்தும், நோய்தணிப்பிற்கான மருத்துவம் குறித்தும் அறிய நமது மருத்துவர்கள் அங்கு சென்று பயிற்சி பெறுதல் வேண்டும் என்று அபோல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் டாக்டர் கணபதி ராமன் கருதுகின்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்