முக்கிய செய்திகள்

ராகுல்காந்தி மோட்டார் சைக்கிளில் பயணம்

வியாழக்கிழமை, 12 மே 2011      இந்தியா
Rahul

 

நொய்டா, மே.12 - டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி மோட்டார் சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

நொய்டா பகுதியில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 2 போலீசாரும் 2 விவசாயிகளும் பலியாகினர். ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கலவரம் நடந்த நொய்டா பகுதிக்கு நேற்று காலை வந்தார். உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்காமலே திடீரென் வருகை தந்த அவர் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ராகுல்காந்தியை பார்த்ததும் விவசாயிகள் ஆச்சரியம் அடைந்தனர். அப்போது விவசாயிகள் தாங்கள் தாக்கப்பட்ட விவரத்தை தெரிவித்தனர். தேடுதல் வேட்டை என்ற பேரில் போலீசார் நடத்திய அராஜகம் குறித்தும் அவர்கள் தாக்கியதில் ஏற்பட்ட காயங்கள் குறித்தும் ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்திருப்பது ராகுல்காந்தி என்று அறிந்ததும் விவசாயிகள் திகைத்து போய்நின்றனர். ராகுல்காந்தி மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தார். வண்டியை வேறு ஒருவர் ஓட்டி வந்தார். அவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம் என்று தெரிகிறது. விவசாயிகளை சந்தித்த ராகுல் காந்தி தனது ஆதரவை அவர்களுக்கு தெரிவித்தார். கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போதுமான நஷ்ட ஈடு வாங்கி தருவதாக உறுதி கூறினார். கலவரத்திற்கு மாநில அரசே காரணம் என்று கூறிய அவர் விவசாயிகள் வன்முறையை கைவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தி இதுபோல் உள்ளூர் போலீசாருக்கு தகவல் சொல்லாமல் திடீரென்று செல்வது வழக்கம். அப்போதெல்லாம் அவர் காரிலோ அல்லது விமானத்திலோ தான் செல்வார். ஆனால் இப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் சென்றிருப்பது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: