முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்காக பீகார் பயணத்தை மாற்றிய ஜனாதிபதி பிரணாப்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 12 - நரேந்திர மோடியின் நிகழ்ச்சிக்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது பீகார் பயண திட்டத்தை மாற்றியமைத்தார். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 26 ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். மறுநாள் 27 ம் தேதி பாட்னாவில் ஜகஜீவன்ராம் சிலை திறப்பு விழாவிலும் அவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே 27 ம் தேதியன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பேரணியும், தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளன. மோடி பீகாருக்கு வரும் நேரத்தில் ஜனாதிபதியின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தடைகள் ஏற்படுத்த நிதீஷ் அரசு முயல்வதாக பா.ஜ.க குற்றம் சுமத்தியது. 

இந்நிலையில் பீகார் எம்.பி.க்களும், பா.ஜ.க செய்தி தொடர்பாளர்களுமான ஷாநவாஸ் ஹூசேன் மற்றும் ராஜூவ் பிரதாப் ரூடி ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். அப்போது பீகார் பயண தேதியில் மாற்றம் செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பிரணாப் முகர்ஜியும் தனது பீகார் பயண தேதியை மாற்றி கொள்வதாக தெரிவித்தார். 

இது குறித்து ஹ$சேன் கூறுகையில், இது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்தோம். எங்களது நிலையை எடுத்து கூறினோம். அவரும் பயண தேதியை மாற்றிக் கொள்வதாக தெரிவித்தார். அவருக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்து கொண்டோம். மீண்டும் பீகாருக்கு தாங்கள் வர வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுத்தோம் என்றார். 

மாற்றியமைக்கப்பட்ட திட்டப்படி வரும் 26 ம் தேதி பீகார் செல்லும் ஜனாதிபதி ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு அன்றே டெல்லி திரும்புகிறார். இது குறித்து ஜனாதிபதி மாளிகை பின்னர் அறிவித்துள்ள விளக்கத்தில் வரும் 27 ம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சியை அதன் அமைப்பாளர்கள் ரத்து செய்ததால் ஜனாதிபதியின் பயண திட்டம் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மோடியின் பேரணிக்கு தடை விதிக்கும் நோக்கில் ஜனாதிபதியை அழைத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் மோடி தலைமையில் பேரணி நடத்துவது என மார்ச் 20 ம் தேதியே முடிவு செய்து அனுமதி பெறப்பட்டதாகவும் பா.ஜ.க மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி குற்றம் சாட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்