இந்தியாவுடன் போர் என்று சொல்லவே இல்லை: நவாஸ்

Image Unavailable

 

இஸ்லாமாபாத், டிச.5 - இந்தியாவுடன் மீண்டும் போர் மூள்வதற்கு காஷ்மீர் விவகாரம் காரணமாக இருக்கும் என்று தாம் கூறியதாக வெளியான தகவலை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் ஜம்மு - காஷ்மீர் கவுன்சில் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நவாஸ் ஷெரீப் பேசினார்.

அப்போது, இந்தியாதான் ஆயுதப்போட்டியில் இறங்கி ஆயுதங்களை குவிப்பதே, பாகிஸ்தான் ஆயுதப் போட்டியில் நுழைய காரணம் என்றும், காஷ்மீர் பிரச்சினையில் இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூளும் ஆபத்து உண்டு என்றும் அவர் பேசியதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் 'டான்' நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் என்று தாம் குறிப்பிடவில்லை என்று நவாஸ் ஷெரீப் விளக்கம் அளித்துள்ளார்.

அது குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அந்தச் செய்தி அடிப்படையில் தவறானது என்றும், தவறான நோக்கத்தில் அவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நவாஸ் ஷெரீப்பின் உரை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசின் செய்திக் குறிப்பிலும், காஷ்மீருக்காக போர் என்கிற ரீதியில் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ