கனிமொழிக்கு ஜெயிலா? பெயிலா? இன்று தீர்ப்பு

Kanimozhi1 3

புதுடெல்லி, மே 20 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது குறித்த தீர்ப்பு இன்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வெளியாக உள்ளது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுத் துறை நிறுவனமான சி.பி.ஐ. நடத்திவருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் சந்தோலியா, சித்தார்த் பெகூரா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 2 வது குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி(கருணாநிதியின் மகள்), சரத்குமார்(நிர்வாக இயக்குனர்) ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் கனிமொழியும், சரத்குமாரும் கடந்த 6 ம் தேதி டெல்லி சி.பி.ஐ.  சிறப்பு   நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இவர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஜாமீன் கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். கனிமொழி சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி, கனிமொழிக்கு ஜாமீன் வழங்குமாறு வாதாடினார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சி.பி.ஐ. சிறப்பு வக்கீல் யூ.யூ.லலித் வாதாடினார். இது தொடர்பான தீர்ப்பை மே 20 ம் தேதிக்கு (இன்றைக்கு)சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி ஒத்திவைத்துள்ளார். இது தொடர்பான விசாரணை இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கனிமொழி, சரத்குமார் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜராக உள்ளனர். கனிமொழிக்கு பெயில் (ஜாமீன்)கிடைக்குமா? அல்லது நீதிமன்ற காவல்(ஜெயில்)கிடைக்குமா என்பது குறித்த தீர்ப்பை நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று வழங்க இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ