நேரு உள்விளை யாட்டரங்கை மேம்படுத்த ரூ.12 கோடி நிதி

புதன்கிழமை, 22 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.23 - விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ35 .77 .கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:_ 

கல்வியில் மேன்மை, விளையாட்டுப் போட்டிகளில் திறமை ஆகிய இரண்டும் இளைஞர் சமுதாயத்திற்கு இன்றியமையாதது. கல்வியின் மேன்மை அறிவாற்றலை வளர்க்கும். விளையாட்டுத் திறமை உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும். அறிவார்ந்த மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டும் இன்றியமையாதது என்பதால், இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதல்வர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு  எடுத்து வருகிறது.

விளையாட்டு விடுதிகள் துவக்குதல், தினப் பயிற்சி திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதற்காக பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், கிராம விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துதல், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பொறியியல் கல்லூரிகளில்  ஒதுக்கப்பட்டுள்ள 100 இடங்களை 500 ஆக உயர்த்தியது, மாற்றுத் திறனாளிகளுக்கிடையே உள்ள விளையாட்டுத் திறமையை வெளிக் கொணர்வதற்காக விளையாட்டு போட்டிகள் நடத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர்  ஜெயலலிதா  தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.  

சர்வதேச விளையாட்டரங்கில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்களின் ஆலோசனைப்படி விஞ்டான முறையில் விளையாட்டின்  தன்மையின் அடிப்படையில் சத்தான சமச்சீர் உணவு வழங்கப்படடு வருவது அவர்களின் வெற்றிக்கு மூலக் காரணம் என்பதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சத்தான சமச்சீர் உணவு வகைகள் நாள்தோறும் வழங்குவதற்கு ஏதுவாக தற்பொழுது நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தொகையான 75 ரூபாயை 250 ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்கள்.  இதற்காக 10 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர்  ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.

முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிலும் சிறுவர், சிறுமியருக்கு உணவுக்காக நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவியருக்காக தனித்தனியாக சிறப்பு விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.  இவர்களுக்கு நபர் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 90 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் முதன்மை விளையாட்டு மையம் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு  வழங்கப்பட்டு வரும் உணவுப்படி, நாளொன்றுக்கு  நபர் ஒன்றுக்கு 250 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக தேவைப்படும் செலவினத்திற்காக கூடுதலாக 55 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டின்போது  ஹாக்கி போட்டிகள் நடத்துவதற்காக செயற்கை இழை வளைகோல்பந்து ஆடுகளம் 1995 ஆம் ஆண்டு மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில்  அமைக்கப்பட்டது. இந்த ஆடுகளத்தில் பல்வேறு  மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த  ஆடுகளம் 2004 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது.  இநத ஆடுகளம் சீரமைக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிவிட்டப்படியால், தற்பொழுது இந்த ஆடுகளம் வழுக்கும் தன்மையுடையதாக  உள்ளதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகள் மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும், வருங்காலங்களில் நடைபெறவுள்ள பன்னாட்டு, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளை கருத்திற்  கொண்டும், செயற்கை இழை ஆடுகளத்தினை 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்திட முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அனைத்தும் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல்  கட்டப்பட்டவையாதாலால் அவைகளை சீரமைத்து புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு அரங்கங்கள் மற்றும் கட்டமைப்புகளை புதுப்பிக்கவும் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஒரு முறை சிறப்பு மானியமாக5 கோடி ரூபாய் வழங்க முதல்வர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  

10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளிக்கல்வி பயிலும் 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விளையாட்டில் உயர்தரமான பயிற்சி அளிப்பதற்காக,  சென்னை நேரு விளையாட்டரங்கில் சிறுவர்களுக்காகவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறுமியர்களுக்காகவும் இரண்டு உலகத் தரம் வாய்ந்த முதன்மை விளையாட்டு மையங்கள் துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இதனைத் தொடர்ந்து, இதேபோன்று உலகத்தரம் வாய்ந்த முதன்மை விளையாட்டு மையங்களை ஸ்ரீரங்கம், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய 3 இடங்களில் துவக்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்கள்.  இதற்காக 1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 7_வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற போது, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக சென்னையில் நவீனமயமாக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், உள்விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் வளைகோல்பந்து விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல்குள வளாகம், டென்னிஸ் விளையாட்டரங்கம் போன்ற விளையாட்டு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.  சமீபத்தில் நேரு உள்விளையாட்டரங்கம் அருகில் செயற்கை இழை தடகள ஓடுதளம் மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து திடல் வசதிகள் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பகுதியில் விளையாட்டு வீரர்கள் மேலும் பயன் அடைவதற்காக ஸ்குவாஷ் அரங்கம், இறகு பந்து உள்ளரங்கம், கையுந்து பந்து, கூடை பந்து ஆடுகளங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக நீர்  சிகிச்சை நீச்சல் குளம் ஆகியவை கொண்ட மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ஒன்றினை 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.    

மாநில மற்றும்  தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் போது, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வசதியாக தங்குவதற்காக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இரு இடங்களில் தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தங்குமிடம் மற்றும் உணவுக்கூட வசதிகள் ஏற்படுத்திட 3 கோடி ரூபாய் நிதியினை வழங்கி முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். 

மேற்கண்ட உத்தரவுகளின்படி விளையாட்டு மேம்பாட்டிற்காக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 35 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

தமிழ்நாடு தேசிய மாணவர் படை இயக்குநரகம் நாட்டிலுள்ள தேசிய மாணவர் படையில் மூன்றாவது பெரிய இயக்குநரகமாகும்.  300 கல்லூரிகள் மற்றும் 

600 பள்ளிகளில் உள்ள  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களை உள்ளடக்கிய இயக்கமாகும்.  நமது தேசிய மாணவர் படையினர்  புதுடில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்று  அங்கு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு 11 முறை பரிசுகள் பெற்றுள்ளனர்.  

திருத்தியமைக்கப்பட்ட தேசிய மாணவர் படை பயிற்சித் திட்டத்தின்படி, ஆளுமை மேம்பாட்டு வளர்ச்சி மற்றும் ராணுவத்தில் சேருவதற்கான தகுதிகளுடன் கூடிய உயர் பயிற்சி  அளிக்கப்படும். இப்பயிற்சியினை தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்களுக்கு அளிப்பதற்கென்று  தனியாக பயிற்சி அகாடமி ஒன்றினை அமைக்க முதல்வர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  

மதுரை மாவட்டத்திலுள்ள இடையப்பட்டி கிராமத்தில் தேசிய மாணவர் பயிற்சி அகாடமியை அமைப்பதற்கு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு  செய்தும் முதல்வர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: