தேசத் துரோக வழக்கு: முஷாரஃபுக்கு நீதிமன்றம் சம்மன்

Image Unavailable

 

இஸ்லாமாபாத், பிப்.9 - தேசத்துரோக வழக்கில், வரும் 18 ம் தேதி நேரில் ஆஜராகும்படி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷராஃபுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்புயுள்ளது.

முஷாரஃப் மீது அந்நாட்டு அரசு அமைத்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணை நடைபெற்றபோது, பிப்ரவரி மாதம் 7 ம் தேதி முஷாரஃப் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதுடன், அவருக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் விசாரணையின்போது, முஷாரஃப் நேரில் ஆஜராகவில்லை. விசாரணையின் போது நேரில் ஆஜராக முஷாரஃபுக்கு விலக்கு அளிக்கக்கோரி, அவரது வழக்குரைஞர் மனு தாக்கல் செய்தார். மருத்துவமனையில் இருக்கும் முஷாரஃப், குணமடைந்ததும், 18 ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்றும் அவரது வழக்குரைஞர் உறுதியளித்தார். இதனையேற்றுக் கொண்ட  நீதிமன்றம், வரும் 18ம் தேதியன்று  நேரில் ஆஜராக முஷாரஃபுக்கு சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டது. ஆஜராகவில்லை என்றால், அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. இதனிடையே தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து முஷாரஃப், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற பதிவாளர், திருப்பி அனுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ