திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் மஹா குப்பாபிஷேகம்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஜூன் 4 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் திருக்கோவிலில் நாளை மறுநாள்(6.6.2011) மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முருகப்பெருமானின் சிறப்புவாய்ந்த முதற்படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் ரூ. 5 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. அதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கின. யாகசாலை பூஜைகளுக்காக நேற்று முன்தினம் மாலை சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மண்ணெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. வசந்த மண்டபத்தில் சூரிய ஒளியில் இருந்து லென்ஸ் மூலம் அக்னி பெறப்பட்டு பிரதான யாகசாலையின் நெருப்பு மூட்டப்பட்டது.   அதன்பின்னர் மாலையில் யாகசாலை பூஜை செய்யும் சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டப்பட்டது. விக்னேஷ்வர பூஜை, மற்றும் கலாகர்ஷணம் முடிந்து முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மகா தூப தீபாராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை 8.30 மணிமுதல் 12.30 மணிவரை நடந்த பூஜைகளைத் தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தது. நாளை காலை 6 ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 7 ம் கால பூஜைகளும் நடக்கிறது. நாளை மறுநாள் அதிகாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை 8 ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு 6.15 மணிக்கு கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூஜைகள் முடிந்ததும், ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் புனிதநீர் ஊற்றப்பட்டு சமகாலத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மூலவர்கள் மற்றும் பரிவார  மூர்த்திகளுக்கு புனித நீர் மூலம் மஹா அபிஷேகம் நடைபெறும். 

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கோவில் ஸ்தானிக பட்டர்களான சுவாமிநாதன், ராஜா சந்திரசேகர், சொக்கு சுப்பிரமணியம், சண்முகசுந்தரம், ரமேஷ், செல்லப்பா, சிவா ஆகியோர் தலைமையில் 450 சிவாச்சாரியார்கள் மஹாகும்பாபிஷேக திருப்பூஜைகளில் கலந்துகொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: