முக்கிய செய்திகள்

காவேரிப்பாக்கம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் 22 பேர் உடல் கருகி பலி

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

வேலூர், ஜூன்.- 9 - காவேரிப்பாக்கம் அருகே தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்து எரிந்து விபத்துக்கு உள்ளாகியதில் பஸ்சில் பயணம் செய்த 22 பேர் அதே இடத்தில் உடல் கருகி இறந்தனர். இதில் 11 பேருடைய உடல்கள் அடையாளம் காணப்பட்டன. வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் உடல்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் கதறி அழுதபடி சோகத்தில் மூழ்கி உள்ளனர். நெஞ்சை உலுக்கும் இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு- சென்னையில் இருந்து நேற்று முன்தினம் தனியார் சொகுசு பஸ் ஒன்று, பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த டிரைவர் நாகராஜன் பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில் 6 பெண்கள் உள்பட 24 பேர் பயணம் செய்தனர். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் பஸ் வேகமாக வந்துகொண்டு இருந்தது. அப்போது பஸ்சுக்கு முன்பு இரண்டு லாரிகள் போட்டி போட்டு சென்றன. முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி திடீரென்று மோதியது. அதனால் 2 லாரிகளும் உரசிக்கொண்டு தடுமாறியபடி ரோட்டில் நின்றன. லாரிகளுக்கு பின்னால் வந்த தனியார் பஸ்சை, லாரிகள் மீது மோதாமல் இருக்க, அதன் டிரைவர் இடதுபுறம் திருப்பி உள்ளார். இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சிறிய பாலத்தின் மீது மோதியது. இதனால் முன் சக்கரம் இரண்டும் உடைந்தது. பஸ் நிலை தடுமாறி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதே நேரத்தில் டீசல் டேங்க்கும் வெடித்து சிதறி தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவியதில் பஸ் முழுவதும் பனைஓலை எரிவது போல் சடசடவென எரிந்து உருக்குலைந்தது. பஸ்சில் பயணம் செய்தவர்களில் பயணிகள் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது? என்று யூகிக்க முடியவில்லை. என்ன செய்வது என தெரியாமல் பஸ்சுக்குள் பயணிகள் அங்குமிங்கும் ஓடினர். பஸ் ஏ.சி. வசதி கொண்டதால், கண்ணாடிகள் மூடியபடி இருந்தது. அதை அந்த அவசர நேரத்தில் திறக்க முடியாமல் பயணிகள் பலர் தீக்கிரையாயினர். பஸ் டிரைவர் நாகராஜன் கதவை உடைத்துக் கொண்டு பயணிகளை காப்பாற்ற முயன்றார். ஆனால் கதவை திறக்க அவர்களால் முடியவில்லை. பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்ததால் பின்னால் அமர்ந்திருந்த சென்னை முகப்பேறை சேர்ந்த கார்த்திக் ராஜா என்ற பயணி வெளியேவந்து விழுந்து விட்டார். அதனால் அவரும் லேசான காயத்துடன் தப்பிவிட்டார். அந்த வழியாக சென்ற வாகனங்களில் பயணம் செய்தவர்கள், இந்த கோர விபத்தினை பார்த்து துடித்துப்போனார்கள். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ 50 அடி உயரத்துக்கு எரிந்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் 22 பயணிகளும் தீயில் கருகி பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்களால், தீயை அணைக்கத் தான் முடிந்ததே ஒழிய தீயில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க முடியாமல் போனது. அதற்குள் தீ, பஸ்சில் இருந்த பயணிகளை அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிக்கட்டையை போல் எரித்து சாம்பலாக்கி விட்டது. விபத்து நடந்த இடத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் நாகராஜன், வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயராம், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் டேவிட் வின்சென்ட், வேலூர் கோட்ட தீயணைப்பு அலுவலர் பார்த்திபன் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் நாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் உடல்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டு உள்ளன. இதுவரை, விபத்தில் பலியான 22 பேரில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியன் (29), பொள்ளாச்சியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் வெங்கடேசன் (32), சென்னை முகப்பேரை சேர்ந்த சுனிதா (32), சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வராஜ் (58), மதுரையைச் சேர்ந்த மாசானகார்த்திக் (29), ஒரிசாவைச் சேர்ந்த பரத் (26), உடுமலையைச் சேர்ந்த ஜெயராணி (25), பொள்ளாச்சி ஆவாளம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (49), மதுரையை சேர்ந்த ஒரே குடும்பத்தினரான விஜயலட்சுமி (58), இவரது மகன் விமல் (36), பேரன் பிரணவ்ராஜ் (11) உள்பட 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: