அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் - மார்க்சிஸ்ட் கண்டனம்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
g-ramakrishnan

 

சென்னை, பிப்.26 - அரசு ஊழியர்கள் மீது தி.மு.க. அரசு நடத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவது, அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்துவது, அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை nullர்த்தி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் கடந்த இரண்டு தினங்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். சாலைப்பணியாளர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராடும் ஊழியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்பதற்குப் பதிலாக தமிழக அரசு அவர்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டு காட்டுமிராண்டித்தனமாக தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளது. சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு நடத்திய தடியடித் தாக்குதலையும், ஜனநாயக விரோத அணுகுமுறையையும், காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதலையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அரசு ஊழியர்கள் சங்கப் பிரநிதிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளின் நியாயத்தை கருத்தில் கொண்டு சுமூகத் தீர்வு காண வேண்டுமென்றும்; காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும்; கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: