முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் நிலம் அபகரிப்பு - தி.மு.க. கவுன்சிலர் கைது

புதன்கிழமை, 29 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூன்.29​- சேலத்தில் பெண் ஒருவரின் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்த தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கை நேற்று சேலம் மாவட்ட நிலமோசடி பிரிவு போலீசார் கைது செய்தனர். சேலம் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி பத்மாவதி(59). இவர் தனக்கு வீராணம் பிரிவு ரோடு பகுதியில் தனக்கு சொந்தமான 4365 சதுரடி நிலத்தை அபகரித்து அதில் 2592 சதுரடி நிலத்தில் கட்டிடம் கட்டியுள்ளதாக அப்பகுதியின் தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம்(எ)ராமசாமி என்பவர்  அபகரித்துக் கொண்டார் என்றும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனிடம் புகார் கொடுத்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து விசாரணை நடத்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசின் நில மோசடி பிரிவிற்கு உத்தரவிட்டார். இந்த வழக்கை டி.எஸ்.பி.ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆட்டோ மாணிக்கம் பத்மாவதியின் நிலத்தை அபகரித்து கட்டிடம் கட்டியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த மோசடி குறித்த விபரம் வருமாறு.சேலம் வீராணம் பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் தனக்கு சொந்தமான 9 ஆயிரம் சதுரடி நிலத்தை தனது மகள்கள்  சுசீலா தேவிக்கு 4500 சதுர அடியும், மற்றொரு மகள் சந்திரவதனா என்பவருக்கு 4365 சதுர அடியையும் எழுதி வைத்தார்.

இதில் சந்திரவதனா தனக்கு சொந்தமான நிலத்தை அம்மாபேட்டை சிங்கமெத்தையைச் சேர்ந்த பத்மாவதிக்கு விற்பனை செய்துவிட்டார். இந்த நிலையில் இந்த நிலத்தை கடந்த 30.9.96 ஆம் ஆண்டு  அப்பகுதியைச் சேரந்த நாராயணராவ், கிருஷ்ண மூர்த்தி, மோகன் மற்றும் குப்புதாயம்மாள் என்பவர்களுக்கு சொந்தமான நிலம் என்று இவர்கள் பெயரில் போலி ஆவணம் செய்தனர். அந்த நிலத்தை தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம்(எ) ராமசாமி கை ஆளாக கருதப்படும் ராஜா என்பவருக்கு பவர் மூலம் கிரயம் செய்யப்பட்டு பின்னர் ராஜாவிடம் இருந்து அந்த நிலத்தை தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம்(எ)ராமசாமி வாங்கியதாக பத்திரவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் அவர் 2592 சதுரடி நிலத்தில் கட்டிடமும் கட்டியுள்ளார்.

நிலம் அபகரிக்கப்பட்டது  என்பது தெரியவந்ததும் பத்மாவதி சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சேலம் அடிஷனல் சப்- கோர்ட் மேஜிஸ்திரேட் தண்டபாணி என்பவர் 15.3.01 அன்று நிலம் பத்மாவதிக்கு சொந்தம் என தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவர் நிலத்தை சொந்தம் கொண்டாட முயன்ற போது மாணிக்கம் தர மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஆர்.டி.ஓ.விடம்  இது குறித்து முறையிட்டார். கடந்த 18.10.2007 ல்  இது குறித்து விசாரணை நடத்திய அப்போதைய ஆர்.டி.ஓ.காஜா மைதீனும் நிலம் பத்மாவதிக்கு சொந்தம் என கூறிவிட்டார். அப்போதும் அவர் நிலத்தை திருப்பி ஒப்படைக்கவில்லை.

தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா நில மோசடி குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அமைத்திருப்பதை அறிந்த கொண்ட பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆட்டோ மாணிக்கத்தை கைது செய்து 406(நம்பிக்கை மோசடி செய்தல்), 420(ஏமாற்றுதல்),465(பொய் ஆவணம் தயார் செய்தல்), 471(பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணம் என்றும் தெரிந்து அதை உண்மையான ஆவணம் என பயன்படுத்துதல்),448(வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல்) 506(மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் அபகரித்த நிலத்திற்கு இன்றைய தேதி வரை பத்மாவதிதான் வீட்டு வரி கட்டி வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

இதே போல் அருகில் உள்ள நிலத்தை வைத்திருக்கும் கே.ஆர்.சுசீலாவின் நிலத்திலும் சுமார் 216  சதுர அடி ஆட்டோ மாணிக்கம் அபகரித்து உள்ளதாக அவரும் புகார் செய்துள்ளார்.

ஆட்டோ மாணிக்கம் கைது செய்யப்பட்டதை அறிந்த ஏராளமான தி.மு.க.வினர் சேலம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

சேலம்  மாவட்ட தி.மு.க.வினர் கலக்கம்

 

கடந்த தி.மு.க.ஆட்சி காலத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பு மற்றும் ஆட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த தி.மு.க.வினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பகிரங்கமாகவே நில அபகரிப்பு,மோசடி போன்ற காரியங்களை துணிந்து செய்தனர். அதிகாரிகளும் அதை வேடிக்கை பார்த்தனர். தற்போது தமிழக முதல்வராக வந்துள்ள ஜெயலலிதா யாருக்கும் பயப்படாமல் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை அடுத்து அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டு கொடுக்கப்படும் புகாரில் தவறு செய்தவர்கள் மீது கைது நடவடிக்கைகளை தொடருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரின் உறவினர்கள் உள்பட தி.மு.க.வினர் பலர் நில மோசடி மற்றும் அபகரிப்பு செய்துள்தாக கூறப்படுகிறது. தி.மு.க.வின் கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்த தி.மு.க.வினர் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்