முக்கிய செய்திகள்

மீண்டும் பயன்படுத்தக் கூடிய விண்கலம் தயாரிக்க திட்டம்

Image Unavailable

 

பெங்களூர், ஜூலை23 - மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கல தொழில்நுட்பத்தை பின்பற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விண்வெளிக்கு ஒரு விண்கலத்தை அனுப்பினால் அதை மீண்டும் பயன்படுத்துவது மிகவும் கடினம். எனவே ஒரு முறை தயாரிக்கப்பட்ட அந்த விண்கல பயன்பாடு அத்தோடு முடிந்து விடும். ஆனால் அதிகமான செலவை கருத்தில் கொண்டு ஒரே விண்கலத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா அபிவிருத்தி செய்துள்ளது.

இதை அடுத்து இந்தியாவும் இது போன்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கல தொழில்நுட்பத்தை பின்பற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிகமான செலவை குறைக்கும் வகையில் இஸ்ரோவும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஹாசனில் உள்ள மாஸ்டர் கன்ட்ரோல் நிலையத்திற்கு செய்தியாளர் அழைத்துச் செல்லப்பட்டு அதன் இயக்கங்கள் குறித்து அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களுடன் இருந்த ராதாகிருஷ்ணன் இந்த தகவல்களை தெரிவித்தார்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்திற்கு  விசேஷமான பொருட்களும் விசேஷமான எரிபொருளும் தேவைப்படுகிறது. அதே போல மீண்டும் பயன்படுத்தப்படும்  விண்கலத்தை அனுப்பும் ராக்கெட்டிலும் விசேஷமான எரிபொருள் பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது என்றும்  அவர் கூறினார்.

தற்போது ஜி.எஸ்.எல்.வி. மார்க் 2 என்ற ராக்கெட்  திருவனந்தபுரத்தில் உள்ள டாக்டர் விக்ரம் சாராபாய்  மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், ஸ்மார்ட் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தையும் இஸ்ரோ பின்பற்றி வருவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: