முக்கிய செய்திகள்

ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் சந்திப்பு 41 தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      அரசியல்
vijiyakanth

 

சென்னை, மார்ச் - 5 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் நேற்று இரவு சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு குறித்து இருவரும் 25 நிமிடம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தே.மு.தி.க.வுக்கு 41 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதென உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கூட்டணி ஏற்படக் கூடாது என்று சிலர் பகல் கனவுகண்டனர். ஆனால் அந்த கனவு பலிக்கவில்லை. அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. இணைந்து தேர்தலை சந்திப்பது உறுதியாகிவிட்டது. இதனால் தி.மு.க. மேலிடம் ஆடிப்போயிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. 

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அணியில் தற்போது ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, செ.கு.தமிழரசன் தலைமையிலான குடியரசு கட்சி, சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம் மற்றும் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி போன்ற கட்சிகள் உள்ளன. இவற்றில் புதிய தமிழகம், குடியரசு கட்சி, சேதுராமன் கட்சி போன்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. 

இந்த நிலையில்தான் கடந்த 1 ம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வாக்கு பதிவு ஒரே நாளில் நடக்கவிருக்கிறது. ஒருமாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை மே 13 ம் தேதி நடக்கிறது. இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், தேர்தல் ஆணையம் மசிவதாக தெரியவில்லை. தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறது தேர்தல் ஆணையம். 

பகல்கனவு பலிக்கவில்லை

இந்த நிலையில் அ.தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க. வருமா வராதா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் நிலவிவந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அக்கட்சி பிரதிநிதிகள் அ.தி.மு.க. முன்னணி தலைவர்களை சந்தித்து பேசினார்கள். அதன்மூலம் தே.மு.தி.க. கட்சி அ.தி.மு.க. அணிக்கு வருவது உறுதியானது. இருந்தாலும்கூட மதுரையில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணி அமையாது என்பதுபோல பேசினார். விஜயகாந்த் ஒருமுறைகூட அப்படி சொல்லவில்லை என்றும் அழகிரி கூறினார். மேலும் விஜயகாந்தை தூண்டுவதுபோல சில கருத்துக்களை அழகிரி சொல்லிப்பார்த்தார். ஆனால் அழகிரியின் அந்த ஆசை நிறைவேறவில்லை. அவர் பேட்டி கொடுத்த சில மணி நேரத்திலேயே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்  போயஸ்கார்டன் நோக்கி புறப்பட்டார். சரியாக இரவு 9.20 மணிக்கு அவர் போயஸ்கார்டன் வந்தார். அவருடன் அவரது கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் சுதீஷ் ஆகியோரும் வந்தனர். பின்னர் விஜயகாந்த், ஜெயலலிதா இல்லத்திற்குள் சென்று அவரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தினார். ஜெயலலிதாவுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்தும் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 25 நிமிடம் நீடித்தது. அப்போது இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து முக்கிய முடிவும் எடுக்கப்பட்டது. அதன்பிறகு விஜயகாந்த் சிரித்துக்கொண்டே வெளியே வந்தார். ஆனாலும் அவர் நிருபர்களுக்கு பேட்டி தரவில்லை. எல்லாம் மேடம் சொல்வார்கள் என்று கூறிவிட்டு விஜயகாந்த் தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். 2005 ல் கட்சி தொடங்கிய விஜயகாந்த், ஜெயலலிதாவை சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சூளுரைத்த விஜயகாந்த்

 தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என்று மேடைகளில் சூளுரைத்தவர் விஜயகாந்த். அந்த எண்ணத்தோடும் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி மலரவேண்டும் என்ற எண்ணத்தோடும் நேற்று போயஸ்கார்டன் வந்து அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு செய்துகொண்டார் விஜயகாந்த். இவரது தலைமையிலான தே.மு.தி.க.வுக்கு மொத்தம் 41 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் கையெழுத்திட்ட உடன்பாடு பின்னர் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

13.4.2011 அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற  தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே இன்று (4.3.2011) தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தப்படி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உடன்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் இருதலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். ஜெயலலிதாவை விஜயகாந்த் சந்தித்தபோது அ.தி.மு.க. தரப்பில் ஒ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த கூட்டணி ஏற்படக் கூடாது என்று பலர் கனவு கண்டார்கள். ஆனால் அவர்களது கனவு பொய்த்துப்போனதுதான் மிச்சம். இன்னும் சொல்லப்போனால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிதான் இன்னமும் இழுபறியிலேயே இருக்கிறது. அ.தி.மு.க.-தே.மு.தி.க கூட்டணியோ உடனடியாக ஏற்பட்டு மக்கள் மத்தியில் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் 

இதை ஷேர் செய்திடுங்கள்: