முக்கிய செய்திகள்

ஈரானில் அணு உலையில் மின்சார உற்பத்தி தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

டெஹ்ரான்,செப்.6  - ஈரான் நாட்டில் கட்டுப்பட்டுள்ள புதிய அணு உலையில் நேற்று மின்சார உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நாட்டின் மின்சார இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான கொள்கையை ஈரான் கடைப்பிடித்து வருகிறது. ஈராக்கை கைப்பற்றியுள்ள அமெரிக்கா, ஈரானையும் கைப்பற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் அணு உலை கட்டுவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இங்கு அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுப்பொருட்களில் இருந்து அணுகுண்டுகளை ஈரான் தயாரித்துவிடும் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதற்காக அந்த நாட்டுடன் பொருளாதார தடையை அமெரிக்கா வதித்தது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுக்கும் முட்டுக்கட்டை போட்டது. ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் கியாஸ் கொண்டு வரும் திட்டத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்தியா போன்ற நாடுகள் எரிபொருள் தேவையை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரான் அணு உலையை கட்டியது. புஷெஹர் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணு மின் நிலையத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை அன்று 60 மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின்சார கிரிட்டிற்கு அனுப்பப்பட்டது என்று அணு எரிசக்தி ஏஜன்சி தெரிவித்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடங்கிவிட்டதால் ஈரானின் கவலைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. இங்கு அணு மின்சார உற்பத்தியை தொடங்க ஈரான் அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து தோல்வி அடைந்தது. கடைசியில் வெற்றிகிடைத்திருப்பதன் மூலம் அணு மின் உற்பத்தி நாடுகளுடன் ஈரானும் சேர்ந்துள்ளது. இந்த அணு மின் நிலையத்தில் 1000 மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 100 கோடி அமெரிக்க டாலர் செலவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: