அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் 19 கட்டண சேனல்கள்

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.21 - அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் விஜய் டி.வி., என்.டி.டி.வி., சி.என்.என்., டைம்ஸ் நவ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈ.எஸ்.பி.என். உள்ளிட்ட 19 கட்டண சேனல்கள் நேற்று முதல் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கேபிள் டி.வி. இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கேபிள் டி.வி. நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மூலம் சென்னை நீங்கலாக ஏனைய 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிப்பரப்பு மையங்களை 24 மணிநேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி  மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி ஒளிபரப்பின் மூலம் 90 சேனல்களை ஒளிபரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டன. 

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள கேபிள் ஆப்ரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையைப் பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதம் 70 ரூபாய் மட்டுமே கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களால் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் இந்த சேவையை தமிழக முதல்வர் ஜெயலலிதா 2.9.11 அன்று தொடங்கிவைத்தார். முதலில், இலவச சேனல்களை மட்டும் ஒளிபரப்பும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், பின்னர் கட்டண சேனல்களையும் ஒளிப்பரப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று 20-ந்தேதி முதல் விஜய் டி.வி, ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளாநெட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏஎக்ஸ்என்,  எச்பீஓ, நேஷனல் ஜியாகிரிபிக், என்டிடிவி, சிஎன்என், டைம்ஸ் நவ், ஈஎஸ்பின், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டண சேனல்களும் எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி ஒளிபரப்பப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் இணைந்துள்ள கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் 20-ந்தேதி முதல் மாதம் 70 ரூபாய் கட்டணத்திலேயே மேலே குறிப்பிடப்பட்ட கட்டணச் சேனல்களையும் கண்டுகளிக்கலாம்.

இவ்வாறு தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: