முக்கிய செய்திகள்

அணு உலைகள் நிறுவுவதில் புதிய கொள்கை: தா.பாண்டியன்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.23 - அணு உலைகள் நிறுவுவதில் மத்திய அரசு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார். இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஒட்டியுள்ள 40 கிராமங்களைச் சார்ந்த மக்களின் சார்பில் பிரதிநிதிகள் 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இந்த எழுச்சி மக்கள் போராட்டத்தின் மூலம் வந்துள்ளது, மக்களின் இந்த விருப்பத்தை உணர்ந்த தமிழக முதல்வரும் உறுதியான நிலையை அமைச்சரவை முடிவாக எடுப்பதாக அறிவித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. 

நில நடுக்கங்களும், சுனாமிகளும் மிகவும் கூடுதலாக அதிகரித்து வரும் இன்றைய காலத்தில் ஜப்பான் புகிசிமாவுக்கு பின்னர் உலக முழுவதிலும் பெரும் அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கூடங்குளத்தை ஒட்டிய மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மக்களிடம் எற்பட்ட அச்சம் தான் பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க சம்மந்தப்பட்டவர்களால் எந்த வெளிப்படையான விளக்கங்களும் தரப்படவில்லை. 

கூடங்குளத்தை ஒட்டியுள்ள கிராமப் பஞ்சாயத்துகள் அனைத்திலும் அணு உலை வேண்டாம் என்ற தீர்மானத்தை இயற்றியுள்ளன.  அணு உலைகள் பாதுகாப்பு பற்றிய வெளிப்படைத்தன்மை இல்லை என்பது உண்மை தான். கூடங்குளத்தை சுற்றி 30 கிலோ மீட்டர் 10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மக்களின் போராட்ட உணர்வு இதன் அடிப்படையில் மிகுந்த நியாயமானது என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்திக் கூற விரும்புகிறது.  இந்தப் பின்னணியில் இன்று உடனடியாக அணுஉலையின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவேண்டும் என்பதும், உலகில் பல நாடுகள் வகுத்து கொண்ட வழிமுறைகளை கணக்கில் கொண்டு,  புதிய அணுஉலைகள் நிறுவுவதில் புதிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: