முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.18 - வன்முறை, பதற்றமின்றி மதுரை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17,19 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து மனு தாக்கல் முடிந்து, பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 10 மாநகராட்சி, 60 நகராட்சி, 259 பேருராட்சி, 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்தது. மதுரை மாநகராட்சியில் அதிமுக மேயர் வேட்பாளராக வி.வி.ராஜன்செல்லப்பா, திமுக வேட்பாளராக பாக்கியநாதன், காங்கிரஸ் வேட்பாளராக ஐ.சிலுவை, தேமுதிக வேட்பாளராக கவியரசு, பாஜக வேட்பாளராக ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 15 ம் தேதி வரை அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மதுரையில் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ, கே.தமிழரசன் எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுக வேட்பாளர்களுக்காக வீதி,வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    பிரச்சாரம் முடிவுற்ற நிலையில் நேற்று மதுரை மாநகராட்சி தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நீடித்தது. காலையிலேயே பெண்களும், முதியோர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வயதானவர்களும் சிரமத்தை பார்க்காமல் நடந்து வந்து வாக்களித்தனர். மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல் அமைதியாக இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவும் எடுக்கப்பட்டது. மதுரை மாநகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்  பதற்றமான வாக்கு சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார். இதே போல் மதுரை மாநகராட்சிஆணையாளரும்  பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டார்.

காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியம் விறுவிறுப்பானது. அனைத்து வாக்குச்சாவடியிலும் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 11 மணிக்கு 20 சதவீதம் இருந்த வாக்குப்பதிவு மதியம் 1.30 மணிக்கு 52 சதவீதமாக உயர்ந்தது. மொத்தத்தில் எந்த வன்முறையும், பதற்றமும் இன்றி மதுரை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 

 

திமுக ஆட்சியில் வன்முறையான தேர்தல் - அதிமுக ஆட்சியில் அமைதியான தேர்தல்

 

திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2006 ம் ஆண்டு இதே போல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சியில் ஏராளமான வாக்குச்சாவடிகளை திமுகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டுக்களை போட்டனர். தெற்கு வாசல் பகுதியில் ஓட்டு போட வந்த ஒரு சமூகத்தினரை வேனில் ஏற்றி திருமண மண்பத்தில் வைத்திருந்து ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அனுப்பினர். மேலும் போலீசாரை கையில் வைத்துக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்து நடைபெறும் மதுரை மாநகராட்சி தேர்தல் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு மணி நேரம் தாதமதாக துவங்கிய வாக்குப்பதிவு

 

மதுரை அவனியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்காளர்கள் ஓட்டு போட வந்தும் தேர்தல் அலுவலர்கள் ஓட்டுபதிவு எந்திரத்தை சரிசெய்யாமல் தாமதப்படுத்தினர். அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.முத்துராமலிங்கம் 7 மணிக்கே வந்தும் 8 மணி வரை வாக்களிக்க முடியவில்லை. எந்திரம் வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டது. பின்பு மேயர் வேட்பாளருக்கான எந்திரம் சரியாகி ஓட்டுப்போட துவங்கியதும், வார்டு கவுன்சிலருக்கான எந்திரம் வேலை செய்ய வில்லை. இது குறித்து முத்துராமலிங்கம் எம்எல்ஏ தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான நடராஜனிடம்  புகார் செய்தார். இதன் பின்பு வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!