அ.தி.மு.க.வுடன் கூட்டணி வலுவாக உள்ளது - ஜி.ராமகிருஷ்ணன்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Ramakrishnan

 

சென்னை, மார்ச்.8 ​- அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி இணைந்துள்ள கூட்டணி வலுவாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை என ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டு கட்சிகளையும், ம.தி.மு.க.வையும் பேச்சு வார்த்தைக்கு  அழைக்க தாமதமானது.  காங்கிரஸ்,​ தி.மு.க. இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி சிக்கல் காரணமாக அ.தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் கூட்டணி ஏற்படலாம், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியே வரலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு நேற்று  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டம் முடிந்ததும் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:​

அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். 

இதனைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:​ கம்யூனிஸ்டு கட்சிகள் அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளாரே? 

பதில்:​ நாங்கள் ஊழலையும், சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து வருகிறோம். எனவே இந்த கருத்து முரண்பாடானது. அதற்கு வாய்ப்பில்லை. 

கேள்வி:​ காங்கிரஸ்​ அ.தி. மு.க. கூட்டணி ஏற்படலாம் என்று கூறப்படுகிறதே, அப்படியானால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்? 

பதில்:​ இன்று மாலை அ.தி.மு.க. எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது. இதில் இறுதி முடிவு ஏற்படும். எனவே காங்கிரஸ்​ அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பது உங்களுக்கே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: