பெட்ரோல் விலை மீண்டும் உயருகிறது

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.2 - பெட்ரோல் விலையை எண்ணெய் கம்பெனிகள் மீண்டும் உயர்த்துகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.82 பைசா உயருகிறது. மோட்டார் வாகனங்கள் வைத்திருப்பவர்களின் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்ற மூன்றரை ஆண்டுகளுக்குள் பெட்ரோலிய பொருட்கள் விலையை 10 தடவைகள் உயர்த்தின. மேலும் உயர்த்த வேண்டிய கட்டாயம் இருந்தது. இனி பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தும் பொறுப்பை நாம் வைத்துக்கொண்டால் கெட்ட பெயர் மேலும் அதிகரிக்கும் என்று கருதிய மத்திய அரசு,பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்தும் பொறுப்பை நாட்டில் உள்ள எண்ணெய் கம்பெனிகளுக்கு மத்திய அரசு அளித்துவிட்டு தப்பித்துக்கொண்டது. அதன் பிறகு பெட்ரோலிய பொருட்களின் விலையை எண்ணெய் கம்பெனிகள் ஏற்கனவே பல முறை உயர்த்தியது. இந்தநிலையில் பெட்ரோல் விலையை மேலும் உயர்த்த எண்ணெய் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.82 பைசா உயரும் என்று தெரிகிறது. இந்த விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் காரணம் என்று எண்ணெய் கம்பெனிகள் முதலில் காரணம் கூறின. தற்போது அந்த காரணத்தோடு புதிய காரணம் ஒன்றையும் சேர்த்து கூறியுள்ளது. ஆதாவது இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது. அதனாலும் பெட்ரோல் விலையை உயர்த்துகிறோம் என்று எண்ணெய் கம்பெனிகள் கூறுகின்றன. முதலில் இந்துஸ்தான் பெட்ரோலிய கம்பெனியும் அதனையடுத்து மற்ற அரசு துறை எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோலிய விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால் குறிப்பாக மோட்டார் வாகனங்கள் வைத்திருக்கும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

அதேசமயத்தில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் உள்நாட்டில் பெட்ரோல் விலையை குறைத்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் காரணம் கூறியுள்ளது. அதோடு மட்டுமல்லாது பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருப்பதால் அது தொடர்பான இதர பெட்ரோலிய பொருட்களின் விலையையும் குறைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் அப்படி இருக்க, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது என்று எண்ணெய் கம்பெனிகள் கூறும் காரணம் குழப்பமாக இருக்கிறது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: