முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கு: சுப்பிரமணிய சுவாமிக்கு சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, நவ. - 9 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமிக்கு அவர் கேட்டுக் கொண்டபடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான கொள்கை கோப்பு நகலை வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி நேற்று உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதே சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கையாகும். மேலும் சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கையாகும். இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் தனக்கு கொள்கை கோப்பு நகலை வழங்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கேட்டிருந்தார். இதனை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி அந்த நகலை வழங்குமாறு புலனாய்வு துறைக்கு உத்தரவிட்டார். முன்னதாக இது பற்றி வாதாடிய சுப்பிரமணிய சுவாமி, ஸ்பெக்ட்ரம் உரிமம் தொடர்பான கொள்கை கோப்பை கடந்த 2009 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சி.பி.ஐ. பறிமுதல் செய்துள்ளது. ஆனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது அந்த கோப்பு தாக்கல் செய்யப்படவில்லை. அந்த கோப்பில்தான் ப. சிதம்பரத்தின் கையெழுத்தும், ஒப்புதலும் அடங்கியுள்ளது. இது அவருக்குள்ள தொடர்பை நிரூபிக்கும் என்று வாதிட்டார். சுப்பிரமணிய சுவாமியின் இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, அதில் திருப்தியடைந்து சம்பந்தப்பட்ட கோப்பின் நகலை சுப்பிரமணிய சுவாமிக்கு வழங்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.  முன்னதாக இது பற்றி கூறிய சுப்பிரமணிய சுவாமி, இந்த வழக்கில் இந்த கோப்புதான் மிக மிக முக்கியமானது. ஆகவே சி.பி.ஐ. யின் ரிக்கார்டில் இருந்து ஒரு போட்டோ காப்பி எடுத்துக் கொள்ள தன்னை அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த கோப்புக்காக, தான் சி.பி.ஐ. க்கு விண்ணப்பம் செய்ததாகவும், ஆனால் அவர்களோ, 2 ஜி வழக்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் கோர்ட்டை அணுகுமாறு தன்னை கேட்டுக் கொண்டதாகவும் கோர்ட்டில் சுட்டிக் காட்டினார். இதையடுத்து அவருக்கு கொள்கை கோப்பு நகலை வழங்க சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவிட்டார். எனினும் இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 3 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோப்பின் மூலம் சில ரகசியங்கள் வெளியானால் சிதம்பரத்திற்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை கூட நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!