முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தால் உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி ஜெயலலிதா உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.12- மழை வெள்ளத்தால் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 11.11.11 அன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் பெருமாள், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் சிவராஜன் மற்றும் திருக்கழுக்குன்றம், வயலூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் செல்வராஜ் ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகரும் துயருற்றேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருச்சியில் தமிழ்மொழி போர் தியாகி சின்னசாமிக்கு திருஉருவசிலை -ஜெயலலிதா 

சென்னை, நவ.13- திருச்சியில் தமிழ்மொழி போர் தியாகி சின்னசாமிக்கு சிலை வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களையும் போற்றி பெருமைப்படுத்த வேண்டியதும், அவர்களது பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியதும் ஒரு நல்லரசின் கடமையாகும். தமிழ் மொழிக்கு தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த பெருமக்களுக்கு பெருமை சேர்ப்பதில் எனது அரசு  உரிய முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. உயிரினும் மேலாக நாம் போற்றி வணங்கும் அன்னைத் தமிழ் மொழிக்கு இந்தி ஆதிக்கத்தால் ஆபத்து வந்த நேரத்தில், செந்தமிழுக்கு ஒரு தீங்கு எனில் இந்த தேகம் இருந்தொரு லாபம் உண்டோ எனக் கேட்டு செந்தணலுக்கு தன்னை இரையாக்கிக் கொண்டவர் தியாகி சின்னச்சாமி.திருச்சிராப்பள்ளி, ரயில்வே சந்திப்பில், 24.1.1964 அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது, தியாகி சின்னச்சாமி  திருச்சிராப்பள்ளி ரயில் நிலைய வாசலில்,  விடியற்காலை 4.30 மணிக்கு, தனது இன்னுயிரைத் துச்சமென மதித்து, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, தனது உடல் பற்றி எரிந்து கொண்டிருந்த  நிலையிலும்,  தமிழ் வாழ்க ​  தமிழ் வாழ்க என்று முழங்கியவாறு தமிழ் மொழிக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அப்போது அவருக்கு 27 வயதே ஆகும். 1964 ஆம் ஆண்டு தியாகி சின்னச்சாமியின் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்த எம்.ஜி.ஆர். உடனடியாக சின்னச்சாமியின் குடும்பத்தாருக்கு 5,000/-​ ரூபாய் நிதி அளித்து உதவினார். 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. 21​ஆம் ஆண்டு துவக்க விழாவில் மொழிப்போர் தியாகி சின்னச்சாமியின் குடும்பத்தாருக்கு நான் 50,000/-​ ரூபாய் நிதி உதவி வழங்கினேன்.   தமிழுக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகி சின்னச்சாமியின் பெருமையைப் போற்றி, அவரது நினைவை வணங்கி, 1995 ஆம் ஆண்டு எனது தலைமையிலான கழக அரசின் ஆட்சியில் தஞ்சாவூரில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டில், மொழிப்போர் தியாகி சின்னச்சாமி குடும்பத்தாருக்கு மேலும் 50,000/-​ ரூபாய் வழங்கினேன். திருச்சிராப்பள்ளி   மாவட்டம்,    தென்னூர்,    அண்ணா நகரில்    உள்ள      மொழிப்போர்      தியாகி  சின்னச்சாமியின் கல்லறையில் ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் நினைவாக ஜனவரி 25 ஆம் நாளில் அனுசரிக்கப்படும் வீரவணக்க நாள் அன்று தமிழ் ஆர்வலர்களும், தமிழ் தொண்டர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். இந்தத் தருணத்தில் அவருடைய புகழுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் தாய்மொழித் தமிழுக்காக தன் உயிரைத் துச்சமென மதித்து உயிர் nullத்த மொழிப்போர் தியாகி சின்னச்சாமியின் நினைவைப் போற்றி  திருச்சிராப்பள்ளியில் அன்னாரின் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!